- Home
- Tamil Nadu News
- திமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயனுக்கு முக்கிய பதவி! தூக்கிக்கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!
திமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயனுக்கு முக்கிய பதவி! தூக்கிக்கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!
பாஜக, அதிமுக என பல கட்சிகளில் பயணித்த பிரபல மருத்துவர் மைத்ரேயன், சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இவரது அரசியல் பயணத்தின் தொடர்ச்சியாக, தற்போது திமுகவின் கல்வியாளர் அணி துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையை சேர்ந்த பிரபல புற்றுநோய் சிகிச்சை மருத்துவரான மைத்ரேயன் தனது முதல் அரசியல் பயணத்தை ஆர்எஸ்எஸில் தொடங்கினார். 1991ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து, தமிழ்நாடு பிரிவின் செயற்குழு உறுப்பினராக பணியாற்றினார்.இதனை தொடர்ந்து தமிழக பாஜகவின் பொதுச்செயலாளராகவும், துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.
அடுத்தாக பாஜகவில் இருந்து விலகி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையில் அதிமுகவில் இணைந்தார். இதனை தொடர்ந்து 2001-ம் ஆண்டு மயிலாப்பூர் தொகுதியில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து மூன்று முறை மாநிலங்களவை எம்.பி.யாக பணியாற்றினார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல்கள் காரணமாக ஓபிஎஸ் அணியில் மைத்ரேயன் இணைந்தார். பின்னர் மன்னிப்பு கடிதம் கொடுத்து எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவினார்.
இருப்பினும் இபிஎஸ் அணியில் தனக்கு முக்கியத்துவம் கொடுக்காததால் மைத்ரேயன் மீண்டும் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ம் தேதி பாஜகவுக்கு திரும்பினார். அவருக்கு தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மைத்ரேயன் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
பின்னர் முன்னாள் எம்.பி. மைத்ரேயன் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்தார். இந்நிலையில் திமுகவில் இணைந்த மைத்ரேயனுக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: கழக சட்டதிட்ட விதி 31, பிரிவு 21–ன்படி திமுக கல்வியாளர் அணி துணைத் தலைவராக டாக்டர் வா. மைத்ரேயன் (29, முதல் அவென்யூ, பெசன்ட் நகர், சென்னை – 600090)அவர்கள் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.