- Home
- Tamil Nadu News
- சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் பிரபல துணிக்கடையில் தீ விபத்து.! அலறி ஓடிய மக்கள்
சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் பிரபல துணிக்கடையில் தீ விபத்து.! அலறி ஓடிய மக்கள்
சென்னையில் உள்ள தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் அமைந்துள்ள ஷோபா டெக்ஸ்டைல் ஜவுளிக்கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மக்களை கூட்டம் அலைமோதும் டி.நகர்
சென்னையில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பகுதி, தியாகராயர் நகரில் உள்ள ரங்கநாதன் தெரு, இங்கு அடுத்தடுத்து ஜவுளிக்கடைகள், தங்க நகைக்கடை, பாத்திரக்கடைகள், பர்னிச்சர் பொருட்கள் கடைகள் என 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. எனவே திருமணம் முதல் வீட்டு விஷேசங்களுக்கு இந்த இடத்திற்கு வந்தால் அனைத்து வகையான பொருட்களையும் வாங்கி செல்லலாம்.
எனவே எந்த நேரமும் தி.நகர் ரங்கநாதன் தெரு கூட்டமாக காணப்படும், அந்த வகையில் இன்று காலை 10 மணிக்கு கடைகள் திறந்தம் அப்பகுதியில் மக்கள் கூட்டத்தோடு பரபரப்பாக காணப்பட்டது.
பிரபல துணிக்கடையில் தீ விபத்து
அப்போது ரங்கநாதன் தெருவில் உள்ள ஷோபா டெக்ஸ்டைல் ஜவுளி கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றுள்ளனர். ஆனால் தீயானது வேகமாக பரவி துணிகளில் பிடிக்க தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் கடையில் இருந்து அவரச, அவசரமாக வெளியேறினர். தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை, அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடை முழுவதும் புத்தம் புதிய துணிகள், பிளாஸ்டிக் பைகள் இருப்பதால் தீயானது வேகமாக பரவியுள்ளது.
தீயைணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள்
ஷோபா டெக்ஸ்டைல் ஜவுளி கடையில் ஏற்பட்ட தீயினை அணைப்பதற்காக 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இந்த கடையில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வந்துள்ளனர். மேலும் பொதுமக்களும் பொருட்கள் வாங்க கடைக்கு சென்றுள்ளனர்.
எனவே யாராவது தீ விபத்தில் சிக்கியுள்ளார்களா.? என தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். இந்த நிலையில் முதல் கட்ட விசாரணையில் ஏசி பிளான்டில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.