Fire Accident: சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து; இருவர் உடல் கருகி பலி, இருவர் படுகாயம்
சிவகாசி அருகே இன்று காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த காளையார் குறிச்சியில் முருகவேல் என்பவருக்கு சொந்தமான நாக்பூர் உரிமம் பெற்ற சுப்ரீம் பயர் ஒர்க்ஸ் என்ற தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று காலை வழக்கம் போல் ஒரே அறையில் 4 தொழிலாளர்கள் பட்டாசு மருந்துக் கலவையில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது கோப்பையில் நிரப்பப்பட்ட ரசாயன மூலப்பொருட்களை கொண்டு சென்ற போது அவை கீழே நழுவி விழுந்ததால் அழுத்தம் ஏற்பட்டு வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் அந்த அறை முழுவதும் தரைமட்டமானது. விபத்தில் பணியில் ஈடுபட்ட சிதம்பராபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் (வயது 65), முத்து முருகன் (52) ஆகிய இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த சரோஜினி (55), சங்கரவேல் (54) ஆகிய இரண்டு தொழிலாளர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
சம்பவம் அறிந்து விரைந்து வந்த சிவகாசி தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து எம்.புதுப்பபட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பட்டாசு ஆலை வெடி விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்த சார் ஆட்சியர் பிரியா ரவிச்சந்திரன், விபத்து குறித்து அதிகரிகளிடம் கேட்டறிந்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ரசாயன மூலப்பொருட்களை முறையாக கையாளாகாததே விபத்திற்கு காரணம். விபத்து தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விபத்து ஏற்பட்ட ஆலையின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.