அதிமுக ஆட்சியை காப்பாற்றி கொடுத்தது பாஜக தான்.! எடப்பாடி பழனிசாமி அதிரடி பேச்சு
அதிமுக-பாஜக கூட்டணி மிரட்டி உருவாக்கப்பட்டது என்ற விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ள எடப்பாடி பழனிசாமி, தன்மானத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன் என உறுதியாகக் கூறியுள்ளார்.

அதிமுகவின் கூட்டணி வியூகம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. அந்த வகையில் அதிமுக தனது கூட்டணியை பலப்படுத்த திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது. அந்த வகையில் பலம் வாய்ந்த திமுக கூட்டணியை வீழ்த்த அதை விட பலம் பொருந்திய கூட்டணியை உருவாக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
எனவே பாஜகவுடன் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது கூட்டணியை முறித்த எடப்பாடி பழனிசாமி மீண்டும் பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளார். இந்த கூட்டணி பல தரப்பு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. அதிமுகவை மிரட்டி பாஜக கூட்டணியை உருவாக்கியுள்ளது என அரசியல் கட்சிகள் கூறி வருகிறது.
அமித்ஷாவுடன் சந்திப்பு- இபிஎஸ் விளக்கம்
இந்த நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் 117 வதுபிறந்தநாளை முன்னிட்டு சென்னை வடபழனியில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, மழை காரணமாக வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை காரணமாகத்தான் தான் தருமபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயண திட்டம் மாற்றி அமைக்கப்பட்டதாகவும், உடனே எடப்பாடி பழனிசாமி அதிமுக உட்கட்சி பிரச்சனை குறித்து உள்துறை அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்த டெல்லி செல்கிறார் என பத்திரிக்கைகள் செய்தி வெளியிடப்பட்டதாக தெரிவித்தார்.
இம்மி அளவு கூட விட்டுக்கொடுக்க மாட்டேன்
அதிமுகவை எவராலும் ஒன்னும் பண்ண முடியாது, ஆட்சி அதிகாரத்தை விட தன்மானம் தான் முக்கியம் , இம்மி அளவு கூட விட்டுக்கொடுக்க மாட்டேன் என எடப்பாடி பழனிசாமி உறுதியாக தெரிவித்தார். சிலபேர் கைக்கூலியாக வைத்து ஆட்டம் போடுகிறார்கள் எனவும், அந்த கைக்கூலிகள் யார் என அடையாளம் கண்டுவிட்டோம் , அவர்களுக்கு விரைவில் முடிவுக்கட்டப்படும் எனவும் ஆவேசமாக கூறினார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, சிலபேர் அதிமுக ஆட்சியை கவிழ்க்க பார்த்தார்கள், அவர்களை மன்னித்து துணை முதலமைச்சர் பதவி கொடுத்தோம், ஆனாலும் திருந்தவில்லை, அம்மாவின் கோயிலாக உள்ள அதிமுக அலுவலகத்தை அடிச்சு நொறுக்கினார்கள். இன்னொருவர் சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை கடத்திக்கொண்டு போனார்கள். இவர்களை எல்லாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
ஆட்சியை கவிழ்க்க பார்த்தார்கள்- இபிஎஸ்
எனக்கு உறுதியான எண்ணம் மன நிலை உண்டு, எதற்கும் அஞ்ச மாட்டேன், என்னை யாரும் மிரட்ட முடியாது என தெரிவித்த அவர், மத்தியில் இருந்து யாரும் என்னை அச்சுறுத்தவில்லை, நமக்கு நல்லது தான் செய்தார்கள் , ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியை கபலிகரம் செய்ய பார்த்தார்கள், ஆட்சியை கவிழ்க்க பார்த்தார்கள், அவர்களிடம் இருந்து காப்பாற்றி கொடுத்தவர்கள் மத்தியில் இருந்தவர்கள் தான் எனவும் அந்த நன்றியோடு நாங்கள் இருக்கிறோம் என தெரிவித்தார்.