- Home
- Tamil Nadu News
- கொத்துக் கொத்தாக இரவோடு இரவாக அதிமுக நிர்வாகிகள் நீக்கம்.! விடாமல் அடிக்கும் எடப்பாடி- இது தான் காரணமா.?
கொத்துக் கொத்தாக இரவோடு இரவாக அதிமுக நிர்வாகிகள் நீக்கம்.! விடாமல் அடிக்கும் எடப்பாடி- இது தான் காரணமா.?
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுகவில் தொடர்ந்து நிர்வாகிகள் நீக்கப்பட்டு வருகின்றனர். ஓபிஎஸ் உள்ளிட்டோரை இணைக்க வேண்டும் என்ற செங்கோட்டையனின் கோரிக்கையை நிராகரித்த எடப்பாடி பழனிசாமி, அவரையும் அவரை ஆதரித்த நிர்வாகிகளையும் நீக்கியுள்ளார்.

நெருங்கும் தேர்தல் சூடு பிடிக்கும் தேர்தல் களம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 200 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், வாக்குகளை சேகரிக்கும் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், அதிமுக தரப்பில் தொண்டர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வருகிறது. தேர்தலில் ஒரு வாக்கில் தோல்வி அடைந்தாலும் தோல்வி, தோல்வி தான். ஆனால் அதிமுக தலைமையோ பிரிந்து சென்ற தலைவர்களை ஒருங்கிணைக்காமல் அடுத்தடுத்து கட்சி நிர்வாகிகள் நீக்கி வருகிறது.
இதனால் அதிமுகவின் வாக்குகள் சிதறி வருகிறது. அதிமுகவில் பிரிந்து சென்ற தலைவர்களான ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டவர்களை இணைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோரிக்கை விடுத்தார். மேலும் அதிமுக தலைமை 10 நாட்களுக்குள் இதற்கான முடிவு எடுக்க வேண்டும் என அறிவித்தார்.
செங்கோட்டையன் கட்சி பதவி பறிப்பு
ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனின் அனைத்து பதவிகளையும் பிடுங்கியது. மேலும் செங்கோட்டையனுக்கு ஆதரவாக செயல்பட்ட ஈரோடு மாவட்ட நிர்வாகிகளை அடுத்தடுத்து நீக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது மேலும் சில நிர்வாகிகளை கொத்தாக நீக்கம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்;
செங்கோட்டையன் ஆதரவாளர்கள் நீக்கம்
கழகத்தின் கண்ணியத்திற்கு மாக ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த, மருதமுத்து, (அத்தாணி பேரூராட்சிக் கழக முன்னாள் துணைச் செயலாளர்) கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த, இரா.மா.மணிகண்டன், (மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைத் தலைவர்) ஆகியோர்,
இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.
எடப்பாடி எச்சரிக்கை
இதே போல ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், அம்மாபேட்டை மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் S. செல்வன் அவர்களும், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் அருள் ராமச்சந்திரன் அவர்களும், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் A.V.M. செந்தில் (எ) கோடீஸ்வரன் அவர்களும்,
சத்தியமங்கலம் நகர புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் பொறுப்பிலும், 24-ஆவது வார்டு கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் S.D. காமேஷ் அவர்களும் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.