- Home
- Tamil Nadu News
- முடிந்தது 10 நாள் கெடு.! அமித்ஷாவை சந்திக்கும் எடப்பாடி- காத்திருக்கும் ட்டுவிஸ்ட்
முடிந்தது 10 நாள் கெடு.! அமித்ஷாவை சந்திக்கும் எடப்பாடி- காத்திருக்கும் ட்டுவிஸ்ட்
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு 8 மாதங்களே உள்ள நிலையில், அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன. செங்கோட்டையன் எடப்பாடிக்கு விதித்த கெடு முடிவடைந்த நிலையில், இன்று டெல்லி செல்லும் எடப்பாடி அமித்ஷாவை சந்திக்கிறார்.

சூடு பிடிக்கும் தேர்தல் களம்
தமிழக தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலமே உள்ள நிலையில், தற்போது வரை 4 முனை போட்டி உறுதியாகியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக, எதிர்கட்சியான அதிமுக, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஒருபக்கமும், புதிதாக அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய் மறு பக்கமும் என தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது.
அந்த வகையில் அதிமுக தனது கூட்டணியை பலப்படுத்த பல திட்டங்களை வகுத்து வருகிறது. எனவே திமுகவிற்கு எதிராக எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைக்க முதலில் பாஜகவை தங்கள் கூட்டணியில் இணைத்தது. அடுத்ததாக தவெகவை இணைக்க காய் நகர்த்தியது ஆனால் விஜய் அதிமுக- பாஜக கூட்டணிக்கு கிரீன் சிக்னல் கொடுக்கவில்லை.
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ்- டிடிவி
இதனால் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து வருகிறது. அந்த கட்சிகளும் ஜனவரி மாதம் தங்களது கூட்டணி நிலைப்பாட்டை அறிவிப்பதாக தெரிவித்து விட்டது. இந்த நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் கூட்டணி அமைத்திருந்த முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அடுத்தடுத்து பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதனால் மீண்டும் அதிமுகவின் வாக்குகள் சிதறும் நிலை உருவாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் அதிமுகவிற்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்தார் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன். அதிமுக ஒருங்கிணைந்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும் என தெரிவித்தார்.
அதிமுக தலைமைக்கு 10 நாள் கெடு
மேலும் அதிமுக தலைமை 10 நாட்களுக்குள் ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டிருந்தார். ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனின் அனைத்து பதவிகளையும் பறித்தது. மேலும் செங்கோட்டையனுக்கு ஆதரவாக உள்ள நிர்வாகிகளையும் கட்சியை விட்டு நீக்கியது, தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் வாக்குகளை சேகரிக்க அரசியல் கட்சிகள் முயன்று வரும் நிலையில், அதிமுக தலைமையோ அடுத்தடுத்து அதிமுக நிர்வாகிகைள நீக்கி வருகிறது. இதனால் அதிமுக தலைமை மீது தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
டெல்லி செல்லும் எடப்பாடி
இந்த நிலையில் அதிமுக தலைமைக்கு எதிராக குரல் கொடுத்த செங்கோட்டையன் பாஜக மூத்த தலைவரான அமித்ஷாவை டெல்லியில் சென்று சந்தித்தார். மேலும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்து அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள நிலவரம் தொடர்பாகவும் ஆலோசித்திருந்தார். இந்த சூழ்நிலையில் செங்கோட்டையன் விதித்த 10 நாள் கெடு இன்றுடன் முடிவடைந்துள்ளது.
இந்த நிலையில் இன்று மாலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்லவுள்ளார். குடியரசு துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனை நாளை சந்தித்து பேசவுள்ளார். இந்த சந்திப்பிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
அமித்ஷாவை சந்திக்க திட்டம்
இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் கூட்டணி நிலவரம், அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல், ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையனின் கோரிக்கை தொடர்பாக ஆலோசிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த சந்திப்பின் போது பிரிந்து சென்ற தலைவர்களை ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமித்ஷா அறிவுறுத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது. எனவே எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்திற்கு பிறகு தமிழக அரசியல் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.