தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சியில் பிரச்சாரத்தைத் தொடங்கி, திமுக அரசின் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். விஜய்யை ஆதரித்து பெண் தொண்டர்கள் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சி சென்று பிரச்சாரத்தை தொடங்கினார். மரக்கடை பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகே நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், பகல் 3:00 மணிக்கு தனது உரையைத் தொடங்கிய விஜய், 19 நிமிடங்களில் தனது உரையை நிறைவு செய்தார்.
அப்போது பேசிய விஜய், “இரண்டு அமைச்சர்கள் இருந்தும் திருச்சி முன்னேற்றம் அடையவில்லை. காவிரி நீர் பாயும் பகுதிகளில் கூட குடிநீர் பிரச்சனை நீடிக்கிறது. மணல் கொள்ளையில் ஈடுபடுவதைத் தவிர, வளர்ச்சி பணிகள் செய்யவில்லை” என்று ஆளும் கட்சியான திமுகவை கடுமையாக விமர்சித்தார். இது அங்கிருந்த தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் மற்றும் மக்களிடையே விஜய்க்காக ஆதரவை அதிகரித்துள்ளது என்றே கூறலாம்.

இதுவரை மேலோட்டமாக ஆளும் கட்சியின் தலைமையை கண்டித்த விஜய், இந்த பிரச்சாரத்தில் திமுக அமைச்சர்களை விமர்சனம் செய்திருப்பது அக்கட்சி நிர்வாகிகள் இடையே மகிழ்ச்சியையும், ஆரவாரத்தையும் உண்டாக்கி உள்ளது. அவரை பார்க்க வந்த பெண் தொண்டர்கள் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசுபொருளாக மாறியுள்ளது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பற்றியும், 2026ல் டிவிகே தமிழகத்தில் ஆட்சி கண்டிப்பாக அமைக்கும் என்று பேசியுள்ளனர்.
தலைப்பாகை கட்டிய தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த பெண் தொண்டர்கள் பேசிய அந்த வீடியோவில், “அண்ணன் இவ்வளவு தடைகளை தாண்டி திருச்சி மக்களுக்காக வந்து உள்ளார். எல்லாரையும் எதிர்த்து அவரை சீட்டில் உட்கார வைப்போம். 25 நிமிஷம் தான் பேசணும். முன்னாடி 5 வண்டி, பின்னாடி 5 வண்டி தான். போகணும். மற்ற எல்லா கட்சிக்கும் இதை பண்ணல. எங்க தவெக கட்சிக்கும் மட்டும் ஏன் பண்ணுறாங்க? ஏன்னா பயம், தவெக ஆட்சிக்கு வந்திடுமோன்னு. நாங்க ஒரு டைம் சான்ஸ் கொடுத்து பார்ப்போம்.
தளபதி விஜய் மக்களுக்காக வாழ்கிறேன். மக்களை வாழ வைக்கிறேன்னு சொல்லியிருக்காரு. 2026ல் அவருதான் இறங்குறாரு. என்ன ஆனாலும் சரி, டிவிகே தான். அங்கிள் அங்கிள், என்ன அங்கிள், பயமா இருக்கா அங்கிள். கண்டிப்பா அண்ணன் வந்துருவாரு அங்கிள், டிவிகே தான். தளபதி தான், 2026ல் மாற்றத்தை நாங்கள் உருவாக்குவோம்" என்று தவெக பெண் தொண்டர்கள் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
