- Home
- Tamil Nadu News
- செங்கோட்டையனை நீக்கிய கையோடு புதிய மாவட்ட செயலாளர் நியமனம்! அசராமல் எகிறி அடிக்கும் இபிஎஸ்!
செங்கோட்டையனை நீக்கிய கையோடு புதிய மாவட்ட செயலாளர் நியமனம்! அசராமல் எகிறி அடிக்கும் இபிஎஸ்!
அதிமுகவில் ஒன்றிணைப்பு கோரிக்கை வலுக்கும் நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து புதிய மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்: பிரிந்து கிடக்கும் அதிமுக தலைவர்கள் அனைவரும் மீண்டும் ஒண்றிணைய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்தார்.
அதன் தொடர்ச்சியாக நேற்று தேனியில் பிரச்சாரம் மேற்கொண்ட இபிஎஸ் பிரச்சார வாகனத்தை மறித்து அதிமுக ஒன்றிணைய வேண்டும் என பதாகைகளுடன் சிலர் முற்றுகையிட்டனர். இதனையடுத்து திண்டுக்கலுக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி இன்று காலை கட்சியின் முக்கிய நிர்வாகிகளான கே.பி. முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர்களுடன் 2 மணிநேரம் அவசர ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து அதிமுக அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஆகிய கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்: ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிற்கு ஒருவர் நியமிக்கப்படும் வரை, மாவட்டக் கழகப் பணிகளை மேற்கொள்வதற்காக, A.K. செல்வராஜ், MLA., அவர்கள் (கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.