- Home
- Tamil Nadu News
- தமிழகத்தில் இந்த 24 அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட தடையா.? தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு
தமிழகத்தில் இந்த 24 அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட தடையா.? தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு
தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. 2019 முதல் தேர்தலில் போட்டியிடாத 345 கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் 24 கட்சிகள் இதில் அடங்கும்.

தேர்தலும் அரசியல் கட்சியும்
நாடு முழுவதும் பல ஆயிரம் கட்சிகள் உள்ளது. அந்த வகையில் தேர்தல் வந்தாலே போதும் சிறு சிறு கட்சிகள் தலை தூக்க தொடங்கிவிடும். லெட்டர் பேடில் மட்டுமே அந்த அரசியல் கட்சிகள் அரசியல் செய்யும். அந்த கட்சியில் உறுப்பினர்கள் உள்ளனர்களா என்று பார்த்தால் கேள்வி குறிதான். அந்த வகையில் சும்மா தேர்தல் ஆணையத்தில் மட்டும் பெயரை பதிவு செய்து விட்டு தேர்தலில் போட்டியிடாமல் பெரிய கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து விட்டு தேவையானதை பெற்றுக்கொண்டு அமைதியாகிவிடும். எனவே தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டு தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் அங்கீகாரத்தை நீக்க நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டது.
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த அரசியல் கட்சிகள்
இதன் முதல் கட்டமாக 2019 முதல் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிட வேண்டும் என்ற முக்கிய நிபந்தனையை நிறைவேற்ற பல கட்சிகள் தவறியுள்ளது. மேலும் அந்த கட்சிகளின் இருப்பிடம் கண்டறிய முடியாத கட்சிகள் என்பதன் காரணமாக 345 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை முதற்கட்டமாக பட்டியலிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையர் தலைவர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையாளர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் தலைமையில் இதற்கான நடவடிக்கை தொடங்கியுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள 2,800க்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளில் பல கட்சிகள் பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளாக தொடர தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்யாதது தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 345 கட்சிகளை தேர்தல் ஆணையம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடாத 345 கட்சிகள்
இதனையடுத்து அந்த கட்சிக்கு ஒரு வாய்ப்பு வழங்கிடும் வகையிலும், தேவையில்லாமல் பட்டியலிலிருந்து நீக்கப்படக்கூடாது என்பதற்காக, சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அந்த கட்சிகளுக்கு விளக்கம் கூற நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பின், அவை தலைமை தேர்தல் அதிகாரிகளால் நடத்தப்படும் விசாரணையின் வாயிலாக அவற்றுக்கு விளக்கம் தரும் வாய்ப்பு அளிக்கப்படும்.
எந்தவொரு பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலிலிருந்து நீக்குவது தொடர்பான இறுதி முடிவை இந்திய தேர்தல் ஆணையம் எடுக்கும். அந்த வகையில் கட்ந்த 2019ஆம் ஆண்டு முதல் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத தமிழகத்தைச் சேர்ந்த 24 கட்சிகளின் பட்டியலை தேர்தல் ஆணைய நோட்டீஸ்
தமிழகத்தில் 24 கட்சிகளுக்கு நோட்டீஸ்
அகில இந்திய ஆதித்தனார் மக்கள் கட்சி, அகில இந்திய பெண்கள் ஜனநாயக சுதந்திர கட்சி, அம்பேத்கர் மக்கள் இயக்கம், அனைத்திந்திய சமுதாய மக்கள் கட்சி, அண்ணா எம்ஜிஆர். ஜெயல்லிதா திராவிட முன்னேற்ற கழகம், அப்பம்மா மக்கள் கழகம்,தேச மக்கள் முன்னேற்ற கழகம், காமராஜர் மக்கள் கட்சி, இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி,இந்திய வெற்றிக்கட்சி, மக்கள் நீதிகட்சி மீனவர்கள் மக்கள் முன்னனி,பசும்பொன் மக்கள் கழகம்,சமூக மக்கள் கட்சி, தமிழ் மாநில கட்சி உள்ளிட்ட 24 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீர் அனுப்பியுள்ளது. இதற்கு உரிய விளக்கங்களை அந்தக் கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும்,
ஒரு மாதத்திற்குள் பதிலளிக்காத கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய தலைமை தேர்தல் அதிகாரி பரிந்துரைகளை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

