- Home
- Tamil Nadu News
- என்னது ஆட்சியில் பங்கு கொடுக்கணுமா? நாங்க என்ன ஏமாளியா? பாஜகவை நேரடியாக அட்டாக் செய்த எடப்பாடி!
என்னது ஆட்சியில் பங்கு கொடுக்கணுமா? நாங்க என்ன ஏமாளியா? பாஜகவை நேரடியாக அட்டாக் செய்த எடப்பாடி!
எடப்பாடி பழனிசாமி முதன்முறையாக பாஜகவை நேரடியாக விமர்சித்துள்ளார். ஆட்சியில் பங்கு கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.

Edappadi Palaniswami Directly Attacked On The BJP
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும், பாஜகவும் கூட்டணி வைத்துள்ளன. இந்த கூட்டணி அமைந்தது முதல் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
அதாவது பாஜகவின் சோதனைக்கு பயந்தே அதிமுக கூட்டணி சேர்ந்துள்ளதாகவும், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜகவோடு கூட்டணி வைத்து தமிழ்நாட்டு மக்களுக்கு எடப்பாடி துரோகம் செய்து விட்டார் எனவும் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அதிமுக-பாஜக கூட்டணி
இது ஒருபுறம் இருக்க, கூட்டணியை உறுதி செய்த அமித்ஷாவும், தமிழ்நாடு முன்னாள் பாஜக தலைவருமான அண்ணாமலையும், மற்ற சில பாஜக தலைவர்களும் அதிமுகவும், பாஜகவும் சேர்ந்தே கூட்டணி அமைக்கும் என்று தெரிவித்து வருகின்றன. ஆட்சி அமைந்தபிறகு முதல்வர் குறித்து முடிவு செய்யப்படும் என சில பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். இது திமுக மற்றும் கூட்டணி கட்சிக்கு மேலும் உற்சாகமாகியுள்ளது.
சுயமரியாதை இன்றி அதிமுக இருக்கணுமா?
''பாஜக எந்த இடத்திலும் எடப்பாடி முதல்வர் வேட்பாளர் என்று சொல்லவில்லை. கூட்டணியில் பேருக்கு தான் அதிமுக இருக்கிறது. எல்லா முடிவையும் அமித்ஷா தான் எடுக்கிறார். இனிமேலும் எடுப்பார்'' என்று திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் தெரிவித்தன. இப்படி சுயமரியாதை இன்றி பாஜக கூட்டணியில் அதிமுக இருக்க வேண்டுமா? என பல்வேறு தரப்பினரும் கேட்டு வந்தனர்.
ஆட்சியில் பங்கு கொடுக்க முடியாது
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜகவுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்க முடியாது என்பதை வெளிப்படையாக பேசியுள்ளார். இது தொடர்பாக 'தமிழக மக்களை மீட்போம்' என்ற பெயரிலான பேரணியில் பேசிய ஈபிஎஸ், ''நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல ஆட்சியில் பங்கு கொடுப்பதற்கு. அதிமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். எங்களுக்கு கூட்டணி வேண்டும் என்றால் வேண்டும். வேண்டாம் என்றால் வேண்டாம். எதைப்பற்றியும் கவலைப்படவில்லை.
கூட்டணி வைத்த நோக்கம் இதுதான்
உங்களை போன்று வாரிசுகளுக்கு (திமுக) ஆட்சி வருவதற்காக கூட்டணி வைக்கவில்லை. மக்கள் விரும்பும் கூட்டணி அமைத்துள்ளோம். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். திமுகவுக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அந்த வகையில் திமுகவின் ஊழல் அரசாங்கத்தை அகற்ற வேண்டும் என பாஜக கருதுகிறது. திமுகவை அகற்ற வேண்டும் என்பதற்காகத் தான் பாஜக எங்களுடன் இணைந்துள்ளது. இன்னும் சில கட்சிகள் வர இருக்கின்றன. சரியான நேரத்தில் திமுகவுக்கு மரண அடி கொடுப்போம்'' என்றார்.
அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்த எடப்பாடி
எடப்பாடியின் இந்த பேச்சு அமித்ஷா எல்லாம் முடிவு எடுக்க முடியாது. கூட்டணிக்கு தலைமை தாங்கும் நாங்கள் தான் முடிவு எடுப்போம் என்பதுபோல் அமைந்துள்ளது. மேலும் எடபப்பாடியின் ஆவேச பேச்சு பாஜக மற்றும் திமுகவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும், அதிமுக தொண்டர்களுக்கு உற்சாகம் அளிக்கும்விதமாகவும் அமைந்துள்ளது.