எந்தக் கொம்பனாலும் அதிமுகவை கபளீகரம் செய்ய முடியாது: எடப்பாடி பழனிசாமி சூளுரை!
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்றும், பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் மு.க.ஸ்டாலினுக்குப் பயம் வந்துவிட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவை கபளீகரம் செய்ய முடியாது
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சூளுரைத்துள்ளார். அதிமுகவை எந்தக் கொம்பனாலும் கபளீகரம் செய்ய முடியாது என்றும், பாஜகவுடன் கூட்டணி அமைத்ததை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார். உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார்.
பாஜக கூட்டணி சர்ச்சை - திமுகவுக்குப் பயம் ஏன்?
தமிழக அரசியலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்ததில் இருந்து, பாஜக தலைவர்கள் 'கூட்டணி ஆட்சி' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்று கூறியது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேவேளையில், பெரியார், அண்ணா ஆகியோரை கொச்சைப்படுத்தியதையும் எடப்பாடி பழனிசாமி கண்டிக்காமல் அமைதி காத்ததாக விமர்சனங்கள் எழுந்தன.
ஸ்டாலின் பதற்றமாக இருக்கிறார்
இந்தச் சூழலில், உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "அதிமுக இத்துடன் முடிந்துவிட்டது என்று ஸ்டாலின் சொல்கிறார். ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். அதிமுகவின் வெற்றிக்கு இங்கு குவிந்திருக்கும் சிப்பாய்களைப் பாருங்கள். இங்குள்ள ஒவ்வொருவரும் 25 வாக்குகளை அதிமுக வேட்பாளருக்குப் பெற்று கொடுக்க வேண்டும். நமக்குக் கூட்டணி பலமானதாக அமையும். யாரும் கவலைப்பட வேண்டாம்.
முதற்கட்டமாக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். பாஜகவுடன் கூட்டணி அமைத்ததில் இருந்து ஸ்டாலின் பதற்றமாக இருக்கிறார். அதிமுக யாருடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு என்ன? ஸ்டாலினுக்குப் பயம் வந்துவிட்டது. பாஜகவுடன் கூட்டணி அமைத்ததை ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை. பாஜகவுடன் கூட்டணி அமைத்ததன் நோக்கம், நமது வேட்பாளருக்கு வாக்குகள் சிதறாமல் கிடைக்க வேண்டும். திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதற்காகக் கூட்டணி வைத்துள்ளோம்" என்று முழங்கினார்.
பொன் விழா கண்ட கட்சி அதிமுக
அதிமுகவை பாஜக கபளீகரம் செய்துவிடும் என்று சிலர் சொல்வதாகக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, "அதிமுக பொன் விழா கண்ட கட்சி. ஒவ்வொரு தொண்டரின் உடலிலும் ஓடுவது அதிமுகவின் ரத்தம். எம்ஜிஆர் மறைவுக்குப் பின் கூட, கருணாநிதியால் அதிமுகவை வீழ்த்த முடியவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஸ்டாலின் அதிமுக ஆட்சியை கவிழ்க்க நினைத்தார். ஆனாலும் அதிமுகவை வீழ்த்த முடியவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வென்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும்" என்று உறுதியாகத் தெரிவித்தார்.
'10 தோல்வி பழனிசாமியா?' - ஸ்டாலின் விமர்சனத்துக்குப் பதிலடி
"எந்தக் கொம்பனாலும் அதிமுகவை கபளீகரம் செய்ய முடியாது. தேர்தலில் எதிரிகளை ஓட ஓட விரட்டி வெற்றி பெற வேண்டும். அதிமுக - பாஜக கூட்டணியால் முதல்வர் ஸ்டாலினுக்குப் பயம் வந்துவிட்டது" என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, "எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதில் இருந்து அதிமுக 10 தேர்தல்களில் தோல்வியடைந்ததாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். ஆனால், 2011 முதல் 2021 வரை எத்தனை முறை தோல்வியடைந்தீர்கள் என்பதை திமுக எண்ணிப் பார்க்க வேண்டும். 2011-ல் எதிர்க்கட்சி வரிசையில் கூட திமுகவால் அமர முடியவில்லை. அதிமுகவை விமர்சனம் செய்ய திமுகவுக்கு எந்தத் தகுதியும் இல்லை" என்று ஸ்டாலினின் விமர்சனத்துக்குப் பதிலடி கொடுத்தார்.
திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்
மேலும், "2021-ல் மக்களை ஏமாற்றுவதற்காக சுமார் 500-க்கும் மேலான அறிவிப்புகளை வெளியிட்டார்கள். பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் திமுக. பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், சிலிண்டர் மானியம், கல்விக் கடன் என்று எந்த வாக்குறுதியையும் திமுக நிறைவேற்றவில்லை" என்றும் எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சியைக் கடுமையாகச் சாடினார்.