சசிகலாவை சுற்றி வளைக்கும் அமலாக்கத்துறை.! 200 கோடி மோசடியில் பினாமிகளுக்கு செக்
ED raids Sasikala proxy houses : ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் சென்னை மற்றும் ஹைதராபாத் சொத்துக்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது.

ஜெயலலிதாவும் சசிகலாவும்
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்றவர், முதலமைச்சராகவும் திட்டமிட்டார். ஆனால் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் 4 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த கால கட்டத்தில் அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டதையடுத்து கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். இந்த சூழலில் கனரா வங்கியில் ரூ.200 கோடி மோசடி மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக, சசிகலாவுக்குச் சொந்தமான சென்னை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள சொத்துக்களில் அமலாக்க இயக்குநரகம் (ED) சோதனை நடத்தியுள்ளது.
சசிகலா - வருமான வரித்துறை சோதனை
கடந்த 2017ஆம் ஆண்டு சசிகலா, அவரது உறவினர்கள் தினகரன், திவாகரன் வீடு, அலுவலகம் என 197 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. அப்போது கட்டுமான தொழில் மேற்கொண்டு வரும் மார்க் குழுமத்தின் தலைவர் ஜி.ஆர்.கே.ரெட்டிக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
இவர் சசிகலாவின் பினாமியாக வருமான வரித்துறை தெரிவித்திருந்தது. இந்த சோதனையின் போது பல ஆவணங்கள் கிடைத்தது. இதனை அடிப்படையில் சிபிஐயும் வழக்கு பதிவு செய்திருந்தது.
450 கோடிக்கு சக்கரை ஆலை
மேலும் இந்தியாவின் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பண மதிப்பிழப்பு சமயத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த பத்மாவதி சர்க்கரை ஆலையை, சசிகலா செல்லாத நோட்டுகளான பழைய ரூபாய்களை மொத்தமாக 450 கோடி ரூபாய் கொடுத்து, பினாமி பெயரில் வாங்கியது தெரிய வந்தது.
அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து, சென்னை மற்றும் ஹைதராபாதில் உள்ள சசிகலாவின் பினாமி வீடு மற்றும் மொத்த நகை வியாபாரிகள் வீடு என, ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளில் சோதனை நடத்தினர்.
சசிகலாவின் பினாமிகளுக்கு செக்
குறிப்பாக சென்னை சைதாப்பேட்டையில் சசிகலாவின் பினாமியான, மார்க் குழுமத்தின் இயக்குநரான ராமகிருஷ்ண ரெட்டி வீடு, புரசைவாக்கத்தில் உள்ள தங்க நகை மொத்த வியாபாரியான மோகன்லால் காத்ரி வீடு, சவுகார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகம் ஆகியவற்றில் சோதனை நடந்தது
சசிகலாவுக்குச் சொந்தமான 10 சொத்துக்களுக்கு மார்க் குழுமத்தின் ஜி.ஆர்.கே. ரெட்டி பினாமியாக இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ) கீழ் அமலாக்கத் துறை சோதனைகளைத் தொடங்கியுள்ளது. அதே நேரம் ரூ.200 கோடி வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. அதில் சசிகலாவின் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.