தலை மறைவு வெற்றிக் கழகம்..! போட்டு பொளக்கும் திமுக ஆதரவாளர்கள்
DMK supporters criticize TVK : கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்திற்குப் பிறகு, விஜய் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காமல் தலைமறைவாக இருப்பதும் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

தமிழக அரசியலில் விஜய்
தமிழகத்தில் திமுக- அதிமுக என இரு கட்சிகள் மட்டுமே கடந்த அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக ஆட்சி அமைத்து வரும் நிலையில், அந்த கட்சிகளுக்கு டப் கொடுக்கும் வகையில் அரசியல் களத்தில் இறங்கியுள்ளார் நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கிய விஜய், விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் பிரம்மாண்ட அளவில் மாநாட்டை நடத்தி அசத்தினார்.
இந்த இரண்டு மாநாட்டிலும் பல லட்சம் இளைஞர்கள் கலந்து கொண்டு விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அதற்கு முன்னதாக மக்களை சந்திக்க திட்டம் வகுத்த விஜய், ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரத்தில் சனிக்கிழமை மட்டும் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டார்.
பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காத விஜய்
அந்த வகையில் முதலில் திருச்சி, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரத்தை முடித்தார். இதனை தொடர்ந்து நாகை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பை நடத்திய விஜய், அடுத்ததாக நாமக்கல், கரூரில் நடத்தினார். இதில் அளவுக்கதிமாக கூட்டம் கூடிய நிலையில் கரூரில் மூச்சு திணறி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த துயர சம்பவம் நடைபெற்ற அடுத்த நிமிடம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் , எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கரூரை நோக்கி சென்றனர். ஆனால் தவெக தலைவர் விஜய் உடனடியாக சம்பவம் நடைபெற்ற கரூரில் இருந்து சென்னைக்கு தனி விமானத்தில் புறப்பட்டார்.
தலைமறைவான தவெக நிர்வாகிகள்
இதே போல தவெகவில் அடுத்தக்கட்ட தலைவர்களாக உள்ள புஸ்ஸி ஆனந்த், சிடி நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் கரூர் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து எந்தவித ஆறுதலும் தெரிவிக்கவில்லை. மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையன உதவிகளும் வழங்கப்படவில்லையென விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே கரூர் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கரூர் மாவட்ட செயலாளர் மதியழகனை கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள புஸ்ஸி ஆனந்தையும், சிடி நிர்மலையும் தேடி வருகிறார்கள்.
கிண்டலடிக்கும் திமுக ஆதரவாளர்கள்
இந்த நிலையில் கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி சம்பவம் நடைபெற்ற நிலையில் இன்றோடு 10 நாட்கள் கடந்துள்ளது. இதுவரை தவெக நிர்வாகிகள் எங்கே இருக்கிறார்கள் என்ற கேள்வி சமூகவலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.
இதனை விமர்சிக்கும் வகையில் திமுக ஆதரவாளர்கள் தமிழக வெற்றிக்கழகத்தை தமிழக தலை மறைவு வெற்றிக்கழகம் என விமர்சித்து மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறார்கள்.