அடிமைத்தனம் பற்றி பழனிசாமி பேசலமா? எடப்பாடியை பிச்சு உதறிய முதல்வர் ஸ்டாலின்!
சென்னையில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். திமுக-கம்யூனிஸ்ட் கூட்டணி குறித்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின், கம்யூனிஸ்ட் தோழர்கள் அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டுவதை ஒருபோதும் புறக்கணித்ததில்லை என்றார்.

முப்பெரும் விழாவில் முதல்வர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கியூபா ஒருமைப்பாட்டு தேசியக் குழு சார்பில், சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது. கியூபாவின் புரட்சித் தலைவர் பிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
விமர்சனத்துக்குப் பதிலடி
அப்போது அவர் பேசுகையில், திமுக-கம்யூனிஸ்ட் கூட்டணி குறித்து விமர்சனம் செய்யும் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்தார். "கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக, கம்யூனிஸ்ட் தோழர்கள் அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டத் தவறியதுமில்லை. அவர்கள் சுட்டிக்காட்டுவதை நான் ஒருபோதும் புறக்கணித்ததும் இல்லை. எந்த விஷயங்களில் உடன்பட வேண்டுமோ, அந்த விஷயங்களில் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறேன்" என்று கூறினார்.
எடப்பாடி பழனிசாமி பேசலாமா?
"கம்யூனிஸ்டுகள் மீது எடப்பாடி பழனிசாமிக்கு திடீரென பாசம் வந்துள்ளது. கம்யூனிஸ்டுகள் திமுகவுக்கு அடிமையாக இருப்பதாக அவர் கூறுகிறார். நாட்டில் யார் எதைப்பேச வேண்டும் என்ற வரையறையே இல்லை. அடிமைத்தனம் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசலாமா? இங்கே யாருக்கும் யாரும் அடிமையில்லை. கம்யூனிஸ்டுகள், அரசின் குறைகளை சுட்டிக்காட்டத் தவறியதுமில்லை. அதை நாங்கள் ஒருபோதும் புறக்கணித்ததுமில்லை.
எது தோழமை உணர்வுடன் சுட்டிக்காட்டுவது, எது அவதூறாகப் பேசுவது என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். திமுகவும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் அமைத்திருப்பது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல; அது ஒரு கொள்கை கூட்டணி. எங்கள் கூட்டணி, கொள்கை ரீதியாக இணைந்து, மக்களுக்காகப் பாடுபடும் கூட்டணி." என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
என்னுடைய பெயரே ஸ்டாலின்தான்
தொடர்ந்து பேசிய அவர், "எங்களில் பாதி கம்யூனிஸ்ட்; என்னுடைய பெயரே ஸ்டாலின்தான். நட்பு சுட்டல் எது, உள்நோக்கத்தோடு பரப்பப்படும் அவதூறு எது என எங்களுக்குப் பிரித்துப் பார்க்கத் தெரியும். கொள்கைகளின் தெரிவும், நட்பின் புரிதலும் கொண்டவர்கள் நாங்கள் என்பதற்கு இந்த மேடைதான் அடையாளம்" என உணர்ச்சிபூர்வமாகத் தெரிவித்தார்.
அவர்தான் பிடல் காஸ்ட்ரோ
முன்னாள் முதலமைச்சர் கலைஞரை நினைவு கூர்ந்த முதல்வர் ஸ்டாலின், "2006-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற கியூபா நாட்டின் பெருமையை போற்றும் விழா ஒன்றில் கலைஞர் கலந்துகொண்டார். அப்போது, 'உயிரோடிருக்கும் உலகத் தலைவர்களின் வரிசையில் உங்களைக் கவர்ந்த ஒருவரின் பெயரை கூறுங்கள்' எனக் கேட்கப்பட்டபோது, கலைஞர் அவர்கள், 'உயிரோடு இருப்பவர் மட்டுமல்ல, என் உயிரோடும் மூச்சோடும் கலந்துள்ள ஒரு தலைவர் உண்டு. அவர்தான் பிடல் காஸ்ட்ரோ' என்று பதிலளித்தார். அத்தகைய பெருமைக்குரிய தலைவரின் நூற்றாண்டை நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்" என்றார்.
இந்த முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலினின் பேச்சு, திமுக-கம்யூனிஸ்ட் கூட்டணி ஒரு தேர்தல் கூட்டணி மட்டுமல்ல, அது ஒரு கொள்கை கூட்டணி என்பதை மீண்டும் வலியுறுத்துவதாக அமைந்தது.