முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் வால்மார்ட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

Vikramaraja assured we will not allow Walmart to enter Tamil Nadu: திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தகர் சங்கத்தின் 21ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் த‌மிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் சாமானிய வணிகர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.

திருச்சி வால்மார்ட்டுக்கு எதிராக போராட்டம்

திருச்சியில் ஒரு லட்சம் சதுர அடியில் டி-மார்ட் கட்டடங்கள் கட்டிக் கொண்டு வருகின்றனர். இந்த டி மார்ட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 30ஆம் தேதி டி மார்ட் வளாகத்தில் பல்லாயிரக்கணக்கான வியாபாரிகள் கலந்து கொள்ளும் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. கார்ப்பரேட் கம்பெனிகளின் அத்துமீறல் போன்றவற்றிலிருந்து சிறிய வியாபாரிகளை காப்பதற்காக தமிழ்நாடு வணிகர் சங்கம் பெரும் முயற்சி எடுக்கும்.

மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை

மத்திய, மாநில அரசுகள் சிறு வணிகர்களை காப்பாற்ற சட்டம் இயற்ற வேண்டும். இந்த விவகாரத்தை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை என்றால் 5 ஆண்டுகளில் சிறு வணிகர்கள் காணாமல் போய்விடுவார்கள்'' என்றார். அப்போது தமிழக அரசே டிமார்ட் போன்ற நிறுவனங்களுக்கு லைசென்ஸ் கொடுத்து வருகிறது என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

வால்மார்ட்டை தடுத்து நிறுத்திய ஜெயலலிதா

அதற்கு பதில் அளித்த விக்கிரமராஜா, ''இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வரிடம் நேரடியாகவே கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது. டிமார்ட் வருவது உலகமயமாக்கல் கொள்கை என அதிகாரிகள் கூறுகின்றனர். முன்பு வால்மார்ட் வரும்பொழுது வணிகர் சங்கம் போராட்டம் நடத்தினார்கள். அப்போது வால்மார்ட் வருவதை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தடுத்து நிறுத்தினார். கேரளாவில் டி மார்ட் திறக்க முடியாது. தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த மாலுக்கும் கேரளாவில் அனுமதி கிடையாது. கேரள மாநிலம் அவர்களது வியாபாரிகளை பாதுகாக்கிறது. இதேபோல் தமிழகத்தில் 35 லட்சம் வியாபாரிகள் குடும்பம் உள்ளது. ஒரு கோடி வாக்காளர்கள் உள்ளனர். வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் வரவேண்டும் என்றால் தமிழக அரசு எங்களை பாதுகாக்க வேண்டும்'' என்றார்.

சென்னை போலீஸ் கமிஷனருக்கு நன்றி

தொடர்ந்து பேசிய விக்கிரமராஜா, ''சிகரெட், பிடி வியாபாரிகளை விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் அழைத்து செல்வது தொடர்கதையாகி கொண்டிருக்கிறது. மேலும் வழக்குப்பதிவு, கடைக்கு சீல் வைப்பு போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது. சென்னை மாநகர ஆணையர் இதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளார். அவருக்கு நன்றி. பள்ளி, கல்லூரி அருகே 100 மீட்டர் சுற்றுவட்டாரத்தில் போதை வஸ்துக்கள் விற்பனை செய்யக்கூடாது என்பதில் தமிழ்நாடு வர்த்தக சங்கமும் உறுதியாக உள்ளது'' என்றார்.

டொனால்ட் டிரம்புக்கு கண்டனம்

மேலும் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்தது குறித்து பேசிய விக்கிரமராஜா, ''அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு என்பது பாதிப்பு தான். டிரம்ப் சின்ன பிள்ளை விளையாடுவது போல் விளையாடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இதனால் மக்கள் அனைவரும் ஆன்லைனில் பொருள் வாங்காதீர்கள். உள்நாட்டு பொருள்களை வாங்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்'' என்று தெரிவித்தார்.