- Home
- Tamil Nadu News
- விஜயகாந்த் வீட்டில் அடுத்த சோகம்! கதறி துடிக்கும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா!
விஜயகாந்த் வீட்டில் அடுத்த சோகம்! கதறி துடிக்கும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா!
Premalatha Mother Passes Away: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாயாரும், பொருளாளர் எல்.கே.சுதீஷின் தாயாருமான அம்சவேணி வயது மூப்பால் காலமானார். இந்த துக்க செய்தியறிந்து பிரேமலதாவும், நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்புகிறார்.

பிரேமலதாவின் தாய் காலமானார்
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா. தற்போது தேமுதிகவின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். இவரது தம்பி எல்.கே.சுதீஷ். தேமுதிக பொருளாளராக இருந்து வருகிறார். இவர்களின் தாயார் அம்சவேணி (83) அண்மைக்காலமாக வயது மூப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானார்.
சென்னை திரும்பும் பிரேமலதா
இதனையடுத்து அவருடைய உடல் சாலிகிராமத்தில் உள்ள சுதீஷின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பூத் முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரேமலதாவுக்கும் சுதீஷுக்கும் இந்த தகவல் தெரியவந்ததும் அவர்கள் அந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு கண்ணீருடன் சென்னை திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
தேமுதிக தொண்டர்கள்
பிரேமலதாவின் வீட்டில் நடந்த துக்க செய்தியை அறிந்து தேமுதிக தொண்டர்கள் அந்த பகுதியில் குவிந்து வருகின்றனர். மேலும் பிரேமலதாவின் தாயாரின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில்: தே.மு.தி.க. பொதுச் செயலாளர் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுடைய தாயார் அம்சவேணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். பெற்றெடுத்து அன்பு செலுத்தி வளர்த்த அன்னையை இழந்து வாடும் திருமிகு. பிரேமலதா விஜயகாந்த், தே.மு.தி.க.,வின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் அனைவர்க்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். கடந்த 11ம் தேதி தான் விஜயகாந்த் சகோதரி விஜயலட்சுமி (78) உடல்நலக் குறைவால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.