அன்புமணிக்கு ராமதாஸ் கொடுத்த ஷாக்! நடைபயணத்திற்கு தடை விதித்த டிஜிபி!
பாமக நிறுவனர் ராமதாஸின் புகாரை அடுத்து, அவரது மகன் அன்புமணி ராமதாஸின் நடைபயணத்திற்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால் நடைபயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அன்புமணி நடைபயணம்
அன்புமணி ராமதாஸின் 100 நாள் நடைபயணத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. பாமக நிறுவனரும் அன்புமணியின் தந்தையுமான ராமதாஸ் அளித்த மனுவை ஏற்று தமிழக காவல்துறை டிஜிபி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
உரிமை மீட்க, தலைமுறைக் காக்க
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது மகன் அன்புமணி ராமதாஸ், சென்னை அடுத்த திருப்போரூரில் இருந்து "உரிமை மீட்க, தலைமுறைக் காக்க" என்ற தலைப்பில் இன்று மாலை நடைப்பயணத்தைத் தொடங்கினார்.
ராமதாஸ் மனுவும் டிஜிபி உத்தரவும்
இந்நிலையில், அன்புமணியின் இந்த நடைபயணத்தால் வடமாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம் என பாமக நிறுவனர் ராமதாஸ், காவல்துறை தலைமை இயக்குனர் (டிஜிபி) அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அன்புமணியின் நடைபயணத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கக்கூடாது எனவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரை அடுத்து, தமிழக டிஜிபி, அன்புமணியின் நடைபயணத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் (எஸ்.பி) மற்றும் மாநகர காவல் ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
டிஜிபி அனுப்பிய சுற்றறிக்கை
இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் வாய்ப்புள்ளதால் இந்த நடைபயணத்திற்கு அனுமதி வழங்க வேண்டாம் என டிஜிபி தனது சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், ராமதாஸின் கடிதம் இல்லாமல் இந்த நடைபயணத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது எனவும் சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.