- Home
- Tamil Nadu News
- ரூ.37 கோடி ஸ்வாகா..! கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசல்..! சுற்றுலா பயணிகளுக்கு தடை..!
ரூ.37 கோடி ஸ்வாகா..! கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசல்..! சுற்றுலா பயணிகளுக்கு தடை..!
ரூ.37 கோடியில் கட்டப்பட்ட கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

Kanyakumari Glass Bridge
இந்தியாவின் தென்கோடி முனையமான கன்னியாகுமரி உலகப்புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபமும், 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் கன்னியாகுமரிக்கு பெருமை சேர்ப்பது மட்டுமின்றி, அதிக அளவு சுற்றுலா பயணிகளையும் ஈர்த்து வருகிறது. கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் படகு மூலம் சென்று விவேகானந்தர் மண்டபத்தையும், திருவள்ளுவர் சிலையையும் பார்க்கத் தவறுவதில்லை.
கன்னியாகுமரி கண்ணாடி பாலம்
ஆனால் அடிக்கடி கடல் சீற்றம், கடல்நீர்மட்டம் தாழ்வு போன்றவற்றால் சுற்றுலா பயணிகளால் திருவள்ளுவர் சிலைக்கு சென்று பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், விவேகானந்தர் பாறைக்கு செல்வோர் அனைவரும் திருவள்ளுவர் சிலைக்கும் சென்று வரும் வகையில் விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையில் ரூ.37 கோடி செலவில் கடல் நடுவில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டது.
சுற்றுலா பயணிகள் மத்தியில் வரவேற்பு
சுமார் 97 மீட்டர் நீளத்திலும், 10 அடி அகலத்திலும் கண்ணாடி கூண்டு பாலம் கட்டப்பட்டது. பாலத்தின் நடுப்பகுதியில் 2.4 மீட்டர் தடிமன் கொண்ட கண்னாடிகள் பதிக்கப்பட்டன. கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த நிலையில், கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்ணாடி பாலத்தில் நடந்து சென்று கடலின் அழகை ரசித்து வந்தனர்.
கண்ணாடி பாலத்தில் விரிசல்
இந்த கண்ணாடி பாலத்தை பார்ப்பதற்கு என்றே தினம்தோறும் அங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் மக்கள் வந்து கொண்டிருக்கின்றனர். கண்ணாடி பாலத்தில் செல்ல கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுற்றுலா பயணிகளின் பெரும் வரவேற்பை பெற்ற கண்ணாடி பாலத்தில் ஒரு இடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சுற்றுலா பயணிகளுக்கு தடை
இதனால் கண்ணாடி பாலத்தில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. அதிக அளவு மக்கள் நடந்து சென்றாலும், கடல் சீற்றம் அதிகமாக இருந்தாலும் அதை தாங்கும் வகையிலும், பலத்த காற்றில் பாதிக்கப்படாத வகையிலும் கண்ணாடி பாலம் வலிமையாக அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்து இருந்தது. ஆனால் திறந்து ஓராண்டு கூட முடியாத நிலையில், பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.