திருப்பரங்குன்றம் வழக்கு: தொல்லியல் துறை பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு
திருப்பரங்குன்றம் மலையைப் பாதுகாக்கக் கோரிய வழக்கில், மத்திய தொல்லியல் துறை இயக்குநர் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை வழக்கு
திருப்பரங்குன்றம் மலையைப் பாதுகாக்கக் கோரிய வழக்கில், மத்திய தொல்லியல் துறை இயக்குநர் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், திருப்பரங்குன்றம் மலைப்பகுதி முழுவதையும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும் என்றும், தொல்லியல் துறையின் அனுமதி பெற்ற பிறகே மலை மீது ஏறிச்செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
குப்பைகள், ஆக்கிரமிப்புகள்
மேலும், மலையில் அமைந்துள்ள கோயில்களைப் பாதுகாக்கவும், மலையைச் சுற்றியுள்ள குப்பைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
இந்த வழக்கு முன்னர் விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பாக மத்திய தொல்லியல் துறையிடம் மனு அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுதாரர் தனது புதிய மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
தொல்லியல் துறைக்கு உத்தரவு
இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக மத்திய தொல்லியல் துறை இயக்குநர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.