- Home
- Tamil Nadu News
- சில்ற ஐ.டி. விங்.. நம் எதிரிகள்..! திமுகவை கண்ணா பின்னாவென்று தாக்கிய காங்கிரஸ் மாணிக்கம் தாகூர்
சில்ற ஐ.டி. விங்.. நம் எதிரிகள்..! திமுகவை கண்ணா பின்னாவென்று தாக்கிய காங்கிரஸ் மாணிக்கம் தாகூர்
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, திமுக-காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சியில் பங்கு கேட்டு உரசல் வலுத்துள்ளது. தவெக தலைவர் விஜய்க்கு காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவு தெரிவிப்பதும் இந்த அரசியல் பரபரப்பை அதிகரித்துள்ளது.

மாணிக்கம் தாகூர்
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், திராவிட முன்னேற்றக் கழகம் – இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டணிக்குள் கடும் உரசல் உருவாகி வருகிறது. கூட்டணியில் ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் இருந்து தொடர்ந்து குரல்கள் எழுந்து வரும் நிலையில், அரசியல் சூழல் பரபரப்பை எட்டியுள்ளது. 38 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 3 அமைச்சரவை பதவிகள் வேண்டும் என்ற கோரிக்கை முதல்வர் ஸ்டாலினிடம் வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், மாற்று கூட்டணி வாய்ப்புகளை ஆராயலாம் என்ற வகையில் மறைமுகமாகவும் காங்கிரஸ் நிர்வாகிகள் பேசத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, தவெக தொடர்பான அரசியல் நகர்வுகள் பேசுபொருளாகியுள்ளன. ‘ஜனநாயகன்’ திரைப்பட ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்ட சூழலில், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் எம்பிக்கள் தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக கருத்துகளை வெளியிட்டு வருவது கவனம் பெற்றுள்ளது.
இதற்கிடையில், காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி விஜய்யை நேரில் சந்தித்தது மட்டுமின்றி, திமுகவையும் வெளிப்படையாக விமர்சிக்க தொடங்கியுள்ளார். இதன் விளைவாக, திமுக மற்றும் காங்கிரஸ் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டு வரும் நிலை உருவாகியுள்ளது.
திமுக ஐடி விங்
இந்த பரபரப்புக்கு மேலும் தீ ஊற்றும் வகையில், விருதுநகர் மக்களவை உறுப்பினரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மாணிக்கம் தாகூர் சமூக வலைதளமான X-ல் பதிவை ஒன்று வெளியிட்டுள்ளார். 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வென்ற 58 தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் 20,000-க்கும் குறைவாக இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தம்பி,
இந்த அல்ற சில்ற IT விங் போல நாம் தரம் தாழகூடாது.
நீ உண்மையான காந்தி வழியில் வந்த காங்கிரஸ்காரன் , உன் பாசம் பெருந்தலைவர் மீதும் அன்னை மீதும் கொண்ட பற்று காரணமாக என்றும் வெல்வாய் .
நான் இருக்கிறேன் . ஆனால் தரம் தாழ கூடாது ஏன் என்றால் நம் தலைவன் வெறுப்பு சந்தையில் அன்பின்… https://t.co/fx45SenWi3— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) January 12, 2026
இதன் மூலம், காங்கிரஸ் ஆதரவு இல்லையெனில் திமுகவின் தேர்தல் வெற்றி பாதிக்கப்படும் என்ற மறைமுக எச்சரிக்கையை மாணிக்கம் தாகூர் விடுத்ததாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதற்கு முன், திமுக ஐடி விங்-ஐ “சில்ற ஐ.டி. விங்”, “அரசவைக் கவிஞர்கள்” என கிண்டலடித்த அவரது பதிவுகள், கூட்டணி உறவுகளில் உள்ள விரிசலை வெளிப்படையாக காட்டியுள்ளது.
ஒருபுறம் திமுகவை நீண்டகால நட்புக் கட்சி என புகழ்ந்து பேசும் மாணிக்கம் தாகூர், மறுபுறம் தொடர்ந்து கடும் விமர்சனங்களை முன்வைப்பது அரசியல் குழப்பத்தை அதிகரித்துள்ளது. 2026 தேர்தலுக்கு முன் இந்த மோதல் எந்த திசையில் செல்லும், கூட்டணி தொடருமா அல்லது பிளவு ஏற்படுமா என்ற கேள்வி தமிழக அரசியலில் தற்போது பெரிய விவாதமாக மாறியுள்ளது.

