- Home
- Tamil Nadu News
- 117 சீட் வேணும்; ஆட்சியில் பங்கு தரணும்! திமுகவை மிரட்டும் காங்கிரஸ்! கொளுத்திப் போட்ட இபிஎஸ்!
117 சீட் வேணும்; ஆட்சியில் பங்கு தரணும்! திமுகவை மிரட்டும் காங்கிரஸ்! கொளுத்திப் போட்ட இபிஎஸ்!
DMK- Congress Alliance Rift: 117 சீட்கள் வேண்டும்; ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் கேட்பதால் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

DMK- Congress Alliance Rift
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுகவும், காங்கிரசும் கூட்டணி வைத்துள்ளன. இந்த கூட்டணியில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன. இதில் காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் திமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்க திட்டமிட்டுள்ளன. இதில் விசிக ஒருபடி மேலே போய் ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும் என்பதை அடிக்கடி உணர்த்தி வருகிறது.
ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும்
இந்நிலையில், திமுக வெற்றி பெற்றவுடன் ஆட்சியில் பங்கு தர வேண்டும் என்பதை காங்கிரசும் இப்போதும் கோரிக்கை வைக்கத் தொடங்கியுள்ளது. அதாவது தேர்தலில் காங்கிரஸுக்கு 117 தொகுதிகள் வேண்டும் மற்றும் ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர் அக்ரிஸ் சோனந்தர் கூறியதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கொளுத்திப் போட்ட இபிஎஸ்
இந்நிலையில், ஆட்சியில் பங்கு தர வேண்டும் என காங்கிரஸ் கேட்பதால் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். ஊட்டி ஏடிசி பகுதியில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்.
117 சீட் கேட்கும் காங்கிரஸ்
அப்போது பேசிய அவர், ''நெல்லையில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதிக்கு பாதி காங்கிரஸுக்கு 117 சீட்டுகள் வழங்கப்பட வேண்டும் என்றும், ஆட்சியில் பங்கு வேண்டும் என மாநில பொறுப்பாளர் கிரீஸ் கேட்டுள்ளார். இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்குள் திமுக கூடாரம் காலியாக போகிறது'' என்று தெரிவித்தார்.
எடப்பாடியின் பதிலடி
சட்டப்பேரவை தேர்தலுக்கு அதிமுகவும், பாஜகவும் கூட்டணி வைத்துள்ள நிலையில், இது பொருந்தா கூட்டணி, இந்த கூட்டணியை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் தான் எடப்பாடி பழனிசாமி திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கொளுத்திப் போட்டுள்ளார்.
செல்வபெருந்தகையின் கருத்து என்ன?
'இபிஎஸ் கூறியபடி நாங்கள் மத்தியில் ஆட்சி புரிந்தபோது திமுகவுக்கும் ஆட்சியில் பங்கு கொடுத்தோம். இப்போது திமுகவிடம் கேட்கிறோம். அது போக எங்களுக்கும் தமிழகத்தில் ஓரளவுக்கு வாக்கு வங்கி உள்ளது'' என்று ஒரு சில காங்கிரஸ்காரர்கள் கூறி வருகின்றனர். இபிஎஸ் பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையின் கருத்து என்ன? திமுகவின் கருத்து என்ன? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.