- Home
- Tamil Nadu News
- CM Vijay Divorce Case : முதல்வர் விஜய் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி! விவாகரத்து வழக்கில் நடந்தது என்ன?
CM Vijay Divorce Case : முதல்வர் விஜய் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி! விவாகரத்து வழக்கில் நடந்தது என்ன?
CM Vijay Divorce Case : தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரின் விவாகரத்து வழக்கு, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.இவ்வழக்கில் காணொலி வாயிலாக ஆஜராக அனுமதிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

வழக்கின் பின்னணி
கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி, தனக்கு விவாகரத்து மற்றும் நிரந்தர ஜீவனாம்சம் கோரி சங்கீதா அவர்கள் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு செங்கல்பட்டு முதலாவது குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு, பல்வேறு கட்டங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிமன்றத்தின் உத்தரவு
வழக்கு விசாரணையின் போது, முதலமைச்சர் விஜய் மற்றும் சங்கீதா தரப்பில், தங்களை நேரில் ஆஜராகாமல் வழக்கறிஞர்கள் வாயிலாக காணொலி (Video Conferencing) மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதி சுஜாதா, அந்த கோரிக்கையை நிராகரித்து மனுவைத் தள்ளுபடி செய்தார்.
மேலும், வக்காலத்து தாக்கல் செய்யப்படாதது குறித்து சங்கீதா தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். மனுதாரர் மற்றும் எதிர் மனுதாரர் ஆகியோரின் மின்னஞ்சல் முகவரிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, இவ்வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
முதலமைச்சர் மற்றும் அவரது மனைவி இடையிலான விவாகரத்து வழக்கு என்பதால், இது பொதுவெளியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

