CM Vijay Government : எப்படி இருக்கு CM Vijay-யின் ஒரு மாதகால ஆட்சி? பாஸ் ஆயிட்டாரா?
CM Vijay Government :தமிழ்நாட்டின் 12-வது முதல் அமைச்சராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்று ஜூன் 10-ம் தேதியுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது. ஒரு புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்து ஆட்சிப் பொறுப்பேற்ற விஜய்யின் முதல் 30 நாட்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கு?

முதல் மாதத்தின் முக்கிய நடவடிக்கைகள்
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில், யாருமே எதிர்பாராத வகையில் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க, முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை உறுதி செய்த விஜய், மே 10-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக முதல்-அமைச்சராக பதவியேற்றார்.
முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற முதல் நிமிடத்திலிருந்தே விஜய் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார்:
தேதி வாரியாக முக்கிய அறிவிப்புகள்
- மின்சார கட்டண சலுகை: 2 மாதங்களுக்கு 500 யூனிட்கள் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோருக்கு 200 யூனிட்கள் இலவசம் என்ற தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற கையெழுத்திட்டார்.
- பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு: பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' உருவாக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிக்க 65 அதிரடிப் படைகள் அமைக்கப்பட்டன.
- நிதி நிலை அறிக்கை: தமிழக அரசின் கடன் சுமையைச் சுட்டிக்காட்டிய விஜய், நிதிநிலை தொடர்பாக 'வெள்ளை அறிக்கை' வெளியிடப்படும் என அறிவித்தார்.
- டாஸ்மாக் கட்டுப்பாடு: கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலுள்ள டாஸ்மாக் கடைகளை கண்டறிந்து அகற்றும் பணி தொடங்கப்பட்டது.
- அரசு ஊழியர்கள்: அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 58%-லிருந்து 60%-ஆக உயர்த்தி உத்தரவிட்டார்.
- தொழில் முதலீடு: பி.எம்.டபிள்யூ, யமஹா போன்ற உலகளாவிய தொழில் நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் இறங்கினார்.
- அம்மா உணவகம்: அம்மா உணவகங்களைச் சீரமைத்து, தரமான உணவுகளை வழங்க உத்தரவிட்டார்.
- நிர்வாக சீர்திருத்தம்: புதிய டி.ஜி.பி. நியமனம், உள்ளாட்சி அமைப்புகளில் வெளிப்படைத்தன்மை, ஆன்லைன் தரிசன முறை (கோவில்களுக்கு) போன்ற நிர்வாக ரீதியான மாற்றங்களைக் கொண்டு வந்தார்.
இதையும் படிங்க : CM விஜய்யுடன் செஸ் விளையாடிய பிரக்ஞானந்தா : மாஸ் கிளப்பிய தளபதி! - வீடியோ உள்ளே
சவால்களும் விமர்சனங்களும்
ஆட்சியின் இந்த ஒரு மாதத்தில், எதிர்க்கட்சிகள் மற்றும் சில பொதுமக்கள் தரப்பிலிருந்து சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, மின்தடை, குப்பைகள் அகற்றும் பணி மந்தம் போன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒரு படி மேலே போய் திமுக தலைவர் ஸ்டாலின், தவெக அரசு 3 மாதம் கூட தாங்காது என்று விமர்சித்து பேசினார். அதேபோல், சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட தனது கண்டனத்தைப் பதிவு செய்யத் தவறவில்லை.
தமிழக வெற்றிக் கழகத்தின் தரப்பு நியாயம்
த.வெ.க. ஆதரவாளர்கள் கூறுவதாவது, "நாங்கள் வெளிப்படைத்தன்மையுடன் புகார்களைப் பதிவு செய்வதாலேயே குற்றங்கள் அதிகரித்தது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் இன்னும் பழைய நிர்வாகிகளே நீடிப்பதால், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த அவர்கள் செயல்படுகிறார்கள். இவை அனைத்தும் விரைவில் சீரமைக்கப்படும்," எனத் தெரிவிக்கின்றனர்.
பொறுத்திருந்து பார்ப்போம்!
ஜூன் 8-ம் தேதி செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கியது மற்றும் ஜூன் 9-ம் தேதி 'சிங்கப்பெண்' படையைத் தொடங்கி வைத்தது எனத் தனது பயணத்தைத் தொடரும் விஜய், நிர்வாகத்தில் வேகம் காட்டத் தொடங்கியுள்ளார். ஒரு மாத கால ஆட்சி என்பது மிகக் குறுகிய காலம் என்றாலும், விஜய்யின் இந்த அணுகுமுறை வரும் காலங்களில் தமிழக அரசியலில் எத்தகைய மாற்றங்களைக் கொண்டு வரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

