- Home
- Tamil Nadu News
- Vijay: நீட் விலக்கு முதல் கல்வி நிதி வரை.. பிரதமர் மோடி முன்பு அதிரடி காட்டிய விஜய்.. வியந்து பார்த்த முதல்வர்கள்!
Vijay: நீட் விலக்கு முதல் கல்வி நிதி வரை.. பிரதமர் மோடி முன்பு அதிரடி காட்டிய விஜய்.. வியந்து பார்த்த முதல்வர்கள்!
Vijay:: டெல்லியில் நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், பிரதமர் மோடியிடம் நீட் தேர்வு விலக்கு முதல் கல்வி நிதி வரை பல்வேறு விஷயங்களை கோரிக்கையாக வைத்துள்ளார்.

நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பேச்சு
நிதி ஆயோக்கின் 11வது ஆட்சிமன்ற குழுக்கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று (ஜூன் 11) நடந்தது. இதில் தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் உள்பட பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய் நீட் தேர்வு விலக்கு அளிக்க வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட கல்வி நிதியை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசும்போது கூறியதாவது: இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக முன்னேறவும், அனைத்துத் தரப்பு உள்ளடக்கிய வளர்ச்சியாகவும் அமைந்திட செயல்படுத்தப்படும் திட்டங்களை முழு மனதோடு வரவேற்போம். மேலும், அதிகாரமளிக்கப்பட்ட மாநிலங்கள், கூட்டுறவுக் கூட்டாட்சி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றின் மூலமாக மட்டுமே வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க முடியும் என்று தமிழ்நாடு உறுதியான நம்பிக்கையைக் கொண்டுள்ளது.
ஒன்றிய அரசுக்கு முழு ஒத்துழைப்பு
தமிழக மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாட்டின் நலன்களையும் மக்களின் விருப்பங்களையும் உறுதியாகப் பாதுகாக்கும் வேளையில், ஒன்றிய அரசுடன் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு எங்கள் அரசு தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது. ஆண்டுதோறும் ஐந்து இலட்சம் இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய பணியிடைப் பயிற்சிகள் (Internships) மற்றும் தொழில்துறையுடன் இணைந்த திறன் பயிற்சிகளை வழங்கும் "இளைஞர் திறன் மற்றும் வேலைவாய்ப்பு இயக்கத்தை" செயல்படுத்த விழைகிறேன். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத் திறன் மையங்களை அமைப்பதற்கும், செயற்கை நுண்ணறிவு, ஆழ்தொழில்நுட்பம், இணையப் பாதுகாப்பு, மேகக் கணினி தொழில்நுட்பம், மின்சார வாகனத் தொழில்நுட்பம் மற்றும் குறைக்கடத்தி தொடர்புடைய துறைகளில் பயிற்சி அளிப்பதற்கும் ஒன்றிய அரசின் ஆதரவைக் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்நாட்டுக்கு நீட் தேவையில்லை
நமது மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்காக நடத்தப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET) தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது. ஏனெனில், இந்தத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், கிராமப்புற மாணவர்களும், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, மேற்கண்ட சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் இளங்கலைப் பட்டம் (MBBS), பல் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலைப் பட்டம் (BDS) மற்றும் ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவப் (AYUSH) படிப்புகளில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் உள்ள அனைத்து இடங்களையும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுக்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கோவையில் 2வது எய்ம்ஸ் அமைக்க வேண்டும்
"வறுமையற்ற தமிழ்நாடு இயக்கம்" (Poverty-Free Tamil Nadu Mission) ஒன்றை எங்கள் அரசு முன்மொழிகிறது. மேலும், அனைவருக்கும் வீடு என்ற கனவை நிறைவேற்றுவதற்காக ஒன்றிய அரசின் நிதி உதவியையும் அன்புடன் நாடுகிறேன். உயர்தர மருத்துவச் சிகிச்சையை மேலும் வலுப்படுத்தவும், உலகத்தரம் வாய்ந்த மருத்துவக் கல்வியை வழங்கவும், தரமான மருத்துவ சேவைகள் மக்களுக்கு எளிதில் கிடைத்திடவும், தமிழ்நாட்டிற்கு இரண்டாவது எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையை கோயம்புத்தூரில் அமைக்க அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதற்குத் தேவையான நிலத்தை மாநில அரசு வழங்கும்.
மீனவர்கள் விவகாரம்
பாக் வளைகுடாப் பகுதியில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பதையும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதையும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடிப் படகுகளை விடுவிப்பதையும் உறுதி செய்யுமாறு இந்திய அரசை நான் வலியுறுத்துகிறேன். மேலும், இலங்கை மற்றும் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்கவும், அவர்கள் தங்கள் குடும்பத்தினரிடம் பாதுகாப்பாகத் திரும்புவதை உறுதி செய்யவும் தூதரக நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டுக்கான சாலை திட்டங்கள்
தமிழ்நாட்டின் விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் இரயில் வழித்தடங்களை உரிய நேரத்தில் மேம்படுத்துவது அவசியமாகும். எனவே, பின்வரும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்குமாறு சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மற்றும் ரயில்வே அமைச்சகத்திடம் நான் கேட்டுக்கொள்கிறேன்.
ஜி.எஸ்.டி. சாலையின் (NH-32) செங்கல்பட்டு முதல் திருச்சி வரையிலான பகுதியை ஆறு வழிச்சாலையாக மேம்படுத்துதல்.
NH-81 திருச்சி (பஞ்சப்பூர்) - ஜீயபுரம் - கரூர் பகுதியை ஆறு வழிச்சாலையாக (Six Lane) மேம்படுத்துதல்.
NH-81 கரூர் -கோயம்புத்தூர் பகுதியை ஆறு வழிச்சாலையாக (Six Lane) மேம்படுத்துதல்.
NH-87 மாதவரம் - சோழவரம் இடையே உயர்த்தப்பட்ட வழித்தடம் (Elevated Corridor) அமைத்தல்.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை அதிவேக ரயில் வழித்தடம் (High Speed Rail Corridor) அமைத்தல்.
மேலும், ஒகேனக்கல் மூன்றாம் கட்டக் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக ரூ.2,283.40 கோடி அளவிலான உறுதியளிக்கப்பட்ட ஒன்றிய நிதி உதவியை வழங்குமாறு இந்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன்.
கல்வி நிதியை விடுக்க வேண்டும்
மாநில அரசின் ஊரக வீட்டுவசதித் திட்டங்களுக்கும், ஒன்றிய அரசின் வளர்ச்சியடைந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்திரவாதத் திட்டத்தின் (கிராமப்புறம்) (VB-G RAM-G) கீழ் வேலைவாய்ப்பு உருவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்குமாறு இவ்வாய்ப்பின் மூலம் ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
மாணவர்களின் நலன், கல்விச் சேவைகளின் தொடர்ச்சி மற்றும் கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாத்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, 'ஒருங்கிணைந்த கல்வி' (Samagra Shiksha) திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள ரூ.3,284 கோடி நிதியை, எவ்வித நிபந்தனைகளுமின்றியும், புதிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்தவோ அல்லது மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தவோ வற்புறுத்தாமலும் விரைவாக விடுவிக்குமாறு இந்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன்.
திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண்டும்
நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற விழுமியங்களுக்கு தனித்துவமாக விளங்கும் தொன்மையான நூலான திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்குமாறு இந்திய அரசிடம் இம்மன்றத்தின் முன் கோரிக்கை விடுக்க விழைகிறேன். நிதி ஆயோக் கூட்டம் முடிந்த பிறகு முதல்வர் விஜய் பிரதமர் மோடியை தனியாக சந்தித்து தமிழ்நாட்டின் கோரிக்கைகள் குறித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

