6 நாடுகள், 236 மாணவர்கள்: வெளிநாடுகளுக்கு பறக்கப்போகும் அரசு பள்ளி ஆசிரியர்கள் - முதல்வர் பெருமிதம்
கனவு ஆசிரியர் திட்டத்தின் கீழ் தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பிரான்ஸ் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ள நிலையில், இதனை குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
Government School Teachers
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களை அவ்வபோது கல்வி சுற்றுலா, இன்பு சுற்றுலா அழைத்துச் செல்வது வழக்கம். இதனால் மாணவர்களுக்கு புத்துணர்ச்சி ஏற்பட்டு படிப்பின் மீது கூடுதல் கவனம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், தற்போது அரசுப்பள்ளி ஆசிரியர்களை சுற்றுலா அழைத்துச் செல்லும் சிறப்பான திட்டத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை முன்னெடுத்துள்ளது. அதன்படி முதல் முறையாக 55 அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பிரான்ஸ் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
Government School Teachers
அதன்படி கடந்த 2023 - 24ம் கல்வி ஆண்டில் கனவு ஆசிரியர் விருது பெற்ற 55 ஆசிரியர்கள் வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “2023-24ஆம் கல்வியாண்டில் "கனவு ஆசிரியர்" விருது பெற்ற 55 ஆசிரியப் பெருமக்களை மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லவுள்ளோம். பிரான்ஸ் நாட்டின் கல்வி நிறுவனங்களைப் பார்வையிட்டு, பண்பாடு மற்றும் கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ள கனவு ஆசிரியர்களை இன்று திருச்சியில் சந்தித்து கலந்துரையாடி வாழ்த்துகள் தெரிவித்தோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Minister Anbil Mahesh
அமைச்சரின் பதிவை சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு! கடல் தாண்டி நாம் பெறும் பெருஞ்செல்வம் கல்வியைத் தவிர வேறொன்று உண்டா? அத்தகைய கல்வியின் சிறப்பை நமது தமிழ்நாட்டின் மாணவச் செல்வங்களும் - ஆசிரியப் பெருமக்களும் உணர்ந்து கல்வி வேட்கை கொள்ள மேற்கொள்ளும் நமது திராவிட மாடல் அரசின் சிறப்பான முன்னெடுப்பு!
Government School Teachers
இந்தப் பதிவு குறித்து நான் தம்பி அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்களிடம் பேசியபோது, இதுவரையில் எத்தனை மாணவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளோம் எனக் கேட்டேன். ஆறு நாடுகளுக்கு 236 மாணவர்களை அழைத்துச் சென்றுள்ளதாகவும் - இந்தப் பயணத்துடன் 92 ஆசிரியர்களும் இந்த வாய்ப்பினைப் பெற்றதாகவும் கூறினார். இதைக் கேட்டதும் மகிழ்ச்சியால் என் நெஞ்சம் நிறைந்தது. இந்த முன்னெடுப்புகளைச் செய்துவரும் மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்களுக்கும், அவருக்கு துணை நிற்கும் துறை அதிகாரிகளுக்கும் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.