கரூரில் களம் இறங்கிய சிபிஐ.! விசாரணை அதிகாரிகள் யார் தெரியுமா.?
கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில், இந்த சோக சம்பவம் குறித்த விசாரணையை சிபிஐ அதிகாரிகள் இன்று தொடங்கவுள்ளனர்.

தவெக தலைவர் விஜய் கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கலந்து கொண்ட பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சோக சம்பவத்தில் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. பல்வேறு மர்மங்கள் உள்ளதாக தவெக குற்றம்சாட்டியது.
ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்ட இக்கூட்டத்தில், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததும். தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததாலும் நெரிசல் ஏற்பட்டது. சுவாசப் பிரச்சனை மற்றும் உடல் அழுத்தத்தால் அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம், விஜயின் அரசியல் பயணத்தின் தொடக்கத்தையே கேள்விக்குறியாக்கியது.
இதனைடுத்து தமிழக அரசு உடனடியாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நிபுணர் ஆணையத்தை அமைத்து விசாரணை உத்தரவிட்டார். அதே நேரம், சென்னை உயர்நீதிமன்றம் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைக்க உத்தரவிட்டது. இருப்பினும், இந்த விசாரணைகள் போதுமானதல்ல என்று கருதி, உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் த.வெ.க கட்சி, சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தை அணுகினர்.
உச்சநீதிமன்றமும் அனைத்து விசாரணைகளுக்கும் தடை விதித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. மேலும் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் விசாரணை நடத்த உத்தரவிட்டது. சிபிஐ, மாதந்தோறும் முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் சிபிஐ அதிகாரிகள் எப்போது விசாரணையை தொடங்குவார்கள் என கேள்வி எழுந்தது. அந்த வகையில் கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசல் 41 பேர் உயிரிழப்பு தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார், விசாரணை நடத்த கரூர் வந்தடைந்துள்ளார்.
பிரவீன்குமார் ஐபிஎஸ் தலைமையில், ஏடிஎஸ்பி முகேஷ்குமார் மற்றும் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கொண்ட குழுவினர் கரூர் வந்துள்ளனர். இந்த நிலையில் கரூர் வந்துள்ள சிபிஐ அதிகாரிகளிடம் எஸ்.ஐ.டி வசம் உள்ள கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான ஆவணங்கள் ஒப்படைக்கப்படவுள்ளது. இதனையடுத்து இன்றே தங்களது விசாரணையை சிபிஐ தொடங்கும் எதிர்பார்க்கப்படுகிறது.