- Home
- Tamil Nadu News
- தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்ற காவிரி ஆணையம்! 13.78 TMC நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு!
தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்ற காவிரி ஆணையம்! 13.78 TMC நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு!
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 45வது கூட்டத்தில், நவம்பர் மாதத்திற்கு 13.78 டி.எம்.சி நீரை தமிழகத்திற்கு விடுவிக்க கர்நாடகாவுக்கு திட்டவட்டமாக உத்தரவிடப்பட்டுள்ளது. திறக்கப்படும் நீரின் அளவைக் கண்காணிக்க தமிழக அரசு சிறப்புக் குழுவை நியமித்துள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையம்
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 45-வது கலந்தாய்வுக் கூட்டம், அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் இன்று (நவம்பர் 6, 2025) டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கர்நாடக மாநிலம் தமிழகத்திற்கு நவம்பர் மாதத்திற்கு வழங்க வேண்டிய 13.78 டி.எம்.சி. நீரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஆணையம் திட்டவட்டமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு அதிகாரிகள் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
அணைகளில் நீர் இருப்பு எவ்வளவு?
கூட்டத்தில், தமிழ்நாட்டின் சார்பில் கலந்துகொண்ட அதிகாரி, தற்போதைய நீர் இருப்பு நிலவரங்கள் குறித்து விளக்கிப் பேசினார். மேட்டூர் அணை நீர் இருப்பு (05.11.2025): 89.741 டி.எம்.சி. ஆக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,401 கன அடியாக உள்ளது. விவசாயம், குடிநீர் மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டிற்காக அணையிலிருந்து திறக்கப்படும் வினாடிக்கு 18,427 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது எனக் கூறினார்.
மேலும், கர்நாடக அணைகளின் நீர் இருப்பும், நீர் வரத்தும் கணிசமான அளவில் தொடர்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
கர்நாடகாவுக்கு ஆணையம் பிறப்பித்த உத்தரவு
தமிழ்நாடு அதிகாரி தனது வாதத்தில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, கர்நாடகம் 2025, நவம்பர் மாதத்திற்குத் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 13.78 டி.எம்.சி. நீரினை பிலிகுண்டுலுவில் உறுதி செய்யுமாறு ஆணையத்தை வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டின் கோரிக்கையை ஆணையம் விரிவாகப் பரிசீலித்தது. அதன் முடிவில், ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார், கர்நாடக அரசு 13.78 டி.எம்.சி. நீரைத் தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டும் என்று தெளிவான உத்தரவைப் பிறப்பித்தார்.
சிறப்புப் பொறியாளர் குழு கண்காணிப்பு
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் இந்த உத்தரவுக்குப் பிறகு, தமிழ்நாடு அரசு உடனடியாக ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது.
பிலிகுண்டுலு பகுதியில் கர்நாடகா விடுவிக்கும் நீரின் அளவை உன்னிப்பாகக் கண்காணிக்க சிறப்புப் பொறியாளர் குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், ஆணையத்தின் உத்தரவு முழுமையாகச் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யத் தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது.