- Home
- Tamil Nadu News
- கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்து! 3 இளைஞர்கள் ரத்த வெள்ளத்தில் பலி! நடந்தது என்ன?
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்து! 3 இளைஞர்கள் ரத்த வெள்ளத்தில் பலி! நடந்தது என்ன?
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கார் விபத்தில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள எருமனூர் கிராமத்தில் இரவு கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. திருவிழாவை முடித்துவிட்டு நள்ளிரவு அதே கிராமத்தை சேர்ந்த ஐயப்பன், ஆதினேஷ், வேலு, வெங்கடேசன், கௌதம், நடராஜ் ஆகியோர் டீக்கடைக்கு சென்றுள்ளனர். அப்போது கார் மணவாளர்நல்லூரில் வந்து கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி சாலையோர மரத்தில் இருந்த புளி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. விபத்தில் சம்பவ இடத்திலேயே ஐயப்பன்(19), ஆதினேஷ்(22), வேலு (19) ஆகியோர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். மேலும் வெங்கடேசன், கௌதம், நடராஜ் ஆகியோர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இந்த விபத்து தொடர்பாக அவ்வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்த 3 பேரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒரே ஊரை சேர்ந்த 3 பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.