- Home
- Tamil Nadu News
- சொந்த கட்சி நிர்வாகியின் கார்கள் சல்லி சல்லியாக உடைப்பு! பாஜக முக்கிய நிர்வாகியின் பதவி பறிப்பு! வெளியான அதிர்ச்சி காரணம்?
சொந்த கட்சி நிர்வாகியின் கார்கள் சல்லி சல்லியாக உடைப்பு! பாஜக முக்கிய நிர்வாகியின் பதவி பறிப்பு! வெளியான அதிர்ச்சி காரணம்?
பாஜக தேர்தல் பொறுப்பாளர் செல்வமணி மீது ஒரு கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்த முயன்றது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அமர்நாத் யோகேஸ்வரன் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படம்பை அருகே உள்ள வரதராஜபுரம் பகுதியில் சேர்ந்தவர் ஓம்சக்தி செல்வமணி (50). இவர் பாஜக ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக உள்ளார். இந்நிலையில் 6 பேர் கொண்ட கும்பல் திடீரென கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அவரை தாக்க முயன்றனர். ஆனால் அவர்களிடம் ஒருவழியாக தப்பித்து வீட்டின் கதவை சாத்தி கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் வீட்டின் கதவை உடைக்க முயன்றது. முடியாததால் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்தனர்.
மேலும் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதுகுறித்து செல்வமணி மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த பிரகாஷ், யோகேஸ்வரன், சஞ்சய், தினேஷ்குமார் மற்றும் 15 வயது சிறுவன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்காக பூத் ஏஜன்ட்களுக்கு பாஜக மேலிடம் அளித்த பணத்தைப் பிரிப்பதில் தகராறு எனவும் பாஜக மாநில துணைத் தலைவர் அமர்நாத் சொல்லித்தான் தாக்குதல் நடத்தியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாஜக நிர்வாகம் இளைஞர் அணி மாநில தலைவர் அமர்நாத் யோகேஸ்வரனை பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக இளைஞர் அணி மாநிலத் தலைவர் எஸ்.ஜி.சூர்யா வெளியிட்டுள்ள அறிவிப்பில்: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி மாநிலத் துணைத்தலைவர் அமர்நாத் யோகேஸ்வரன் அவர்கள் (காஞ்சிபுரம் மாவட்டம்) கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயலிலும் ஈடுபட்டதால் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுகிறார். ஆகவே, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

