தமிழகத்தில் டிரெக்கிங்க்கு திடீர் தடை.! சுற்றுலா பயணிகளுக்கு வெளியான ஷாக் தகவல்
காட்டுத்தீ அபாயம் காரணமாக, தமிழ்நாட்டில் ஏப்ரல் 15 வரை மலையேற்ற சுற்றுலாவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இயற்கை மண்டலத்தின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டிரெக்கிங்க்கு திடீர் தடை.! சுற்றுலா பயணிகளுக்கு வெளியான ஷாக் தகவல்
வனப்பகுதிக்குள் சுற்றுலா செல்வது இயற்கையை ரசிக்கும் அனைவருக்கும் ரொம்ப பிடித்தமான ஒன்று. அதிலும் மலையேற்றம் என்பது திரில்லிங்கை விரும்புபவர்களுக்கு கேட்கவா வேண்டும், அடந்த மரங்கள், வன விலங்குகள், அருவிகளை தாண்டி மலையேறுவார்கள். அந்த வகையில் தான் அரசின் உரிய அனுமதியில்லாமல் மலையேற்றமானது தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோடை காலத்தில் குரங்கனி பகுதியில் மலையேற்றத்தின் போது ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதனையடுத்து மலையேற்றத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் 40 இடங்களில் மலையேற்றம்
இதனால் பெரும்பாலான மலைப்பகுதிகளில் மலையேற்றம் செய்ய முடியாமல் சுற்றுலா பயணிகள் தவித்தனர். இந்த நிலையில் தான் வனத்துறை சார்பாகவே டிரெக்கிங் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் படி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளான நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி உள்பட மாவட்டங்களில் 40 இடங்களில் இந்த திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது.
மலையேற்ற வழிகாட்டிகள்
மலையேற்ற வழிகாட்டிகளாக காடுகள் குறித்த பாரம்பரிய அறிவைக் கொண்ட, 50-க்கும் மேற்பட்ட பழங்குடியின மற்றும் வனங்களை ஒட்டியுள்ள கிராமங்களிலிருந்து 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டு, மலையேற்ற வழிகாட்டிகளாக தேர்வு செய்யப்பட்டு பயிற்சியும் வழங்கப்பட்டது. இந்த மலையேற்ற திட்டம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. மேலும் கடினமான மலையேற்றம், எளிதான மலையேற்றம் என இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்பட்டனர்.
காட்டுத்தீ அபாயம்
தமிழ்நாட்டின் இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், வனங்களில், அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் www.trektamilnadu.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து ‘டிரெக்கிங்’ செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வெயிலின் தாக்கம் தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளதால் காடுகள் காய்ந்து காணப்படுகிறது. எனவே எந்த நேரத்திலும் காட்டுத்தீ பிடிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. எனவே காட்டு தீ போன்ற அபாயங்கள் ஏற்படும் என்பதால், இந்த மலையேற்ற சுற்றுலாவுக்கு வருகிற ஏப்ரல் 15-ந்தேதி வரை விடுமுறை விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையேற்றத்திற்கு தடை
மேலும் இயற்கை மண்டலத்தின் பாதுகாப்பையும், நிலைத்தன்மையையும் உறுதி செய்வதற்காக இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்றும், இதன் மூலம் இந்த காலக்கட்டத்தில் வெப்பநிலை உயர்வு, வறண்ட சுற்றுச்சூழல் மற்றும் காட்டு தீ நிகழ்வுகள் அதிகரிப்பால் நடைபயணிகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் அபாயம் ஏற்படாமல் தடுக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.