பொதுக்குழுவில் காலி சேரை வைத்து ஸ்கோர் செய்த அன்புமணி! 40 முறை பேசிவிட்டாராம்
பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் 40 முறை பேசிவிட்டதாகவும், ஆனால் உடன் இருப்பவர்களின் பேச்சை ராமதாஸ் கேட்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.

40 முறைக்கும் மேல் பேசினேன்
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. தந்தை, மகன் இடையேயான சட்டப் போராட்டத்திற்கு பின்னர் நடைபெறும் பொதுக்குழு கூட்டம் என்பதால் இது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி, ஐயாவின் மானம், மரியாதை தான் முக்கியம். நீங்கள் இருவரும் பேசினால் என்ன? நீங்கள் கொஞ்சம் விட்டுக் கொடுக்கலாமே என பலரும் என்னிடம் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வது நல்லது தான். ஆனால் நான் ஒருமுறை, இரண்டு முறை அல்ல 40 முறைக்கும் மேலாக அவரிடம் பேசிவிட்டேன்.
நான் மட்டும் கையெழுத்திடுவேன் என்பதை எப்படி ஏற்க முடியும்?
உறவினர்கள், நண்பர்கள், நலன் விரும்பிகள் உடன் இணைந்து பேசி கட்சியின் அதிகாரத்தில் இருவரும் இணைந்து கையொப்பம் இடலாம் என பேசி முடிவு செய்துவிட்டோம். ஆனால் மீண்டும் சில நாட்கள் கழித்து, இல்லை இல்லை நான் மட்டும் தான் கையெழுத்து போடுவேன் என்று அடம்பிடிக்கிறார். இதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
ராமதாஸ்ன் பதவி காலம் நீட்டிப்பு
ஒவ்வொருமுறை பேசும் போதும் அவர் சமாதானமாவார், ஆனால் அவர் உடன் இருக்கக்கூடிய பூசாரிகள் சிலரின் பேச்சைக் கேட்டு மீண்டும் அவர் மனம் மாறிவிடுகிறார் என்று வருத்தமாகக் கூறினார். மேலும் கட்சி பதவி காலம் கடந்த மே மாத இறுதியில் நிறைவு பெற்றுவிட்ட நிலையில், இன்றைய பொதுக்குழு கூட்டத்தின் கட்சியின் தலைவராக அன்புமணியே மேலும் ஒரு ஆண்டு காலம் நீடிப்பார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காலி நாற்காலி
பொதுக்குழு கூட்டத்தில் மேடையில் காலி நாற்காலி ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. அந்த இருக்கை கட்சியின் நிறுவனர் ராமதாஸ்க்கானது, ராமதாஸ் உருவத்தில் இங்கே இல்லை என்றாலும் உள்ளத்தில் இங்கு தான் இருக்கிறார் என்று சென்டிமெண்டாக பேசி ஸ்கோர் செய்துள்ளார்கள்.

