பாமக.வில் இருந்து அன்புமணி நீக்கம்..! ராமதாஸ் அதிரடி
பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து வகையான பொறுப்பில் இருந்தும் அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவிப்பு.

அன்புமணி மீது பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு நடவடிக்கை
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பாமக.வின் செயல் தலைவரான அன்புமணி தொடர்ந்து கட்சியின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையிலேயே நடந்து கொண்டிருந்தார். இது தொடர்பாக கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு சார்பில் 16 கேள்விகள் எழுப்பப்பட்டு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அதற்கு விளக்கம் அளிக்காமல் அன்புமணி அலட்சியம் காட்டி வந்தார். தொடர்ந்து இரு முறை அவகாசம் அளித்தும் அவர் விளக்கம் அளிக்கவில்லை.
அன்புமணி நீக்கம்
விளக்கம் அளிக்காத காரணத்தால் அவர் தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொள்வதாகக் கருப்படுகிறது. அதன் அடிப்படையில் கட்சியின் விதிகளின் படி அன்புமணி செயல் தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார். செயல் தலைவர் மட்டுமல்லாது கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து வகையான பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார். இதன் பின்னர் அன்புமணியுடன், பாமக.வில் இருப்பவர்கள் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. மீறி தொடர்பு வைக்கும் பட்சத்தில் அவர்களும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்.
நிறுவனரும் நான் தான், தலைவரும் நான் தான்
கட்சியன் மூத்த நிர்வாகிகள் பலரும் அவரிடம் பலமுறை எடுத்துக் கூறியும் அதனை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. கட்சியில் அன்புமணி அணி, ராமதாஸ் அணி என இரு அணிகள் கிடையாது. நான் தான் கட்சியின் நிறுவனர், நான் தான் தலைவர்.
தனி கட்சி தொடங்கி கொள்ளலாம்
இது நான் உருவாக்கிய கட்சி கஞ்சியோ, கூழோ குடித்து 45 ஆண்டு காலம் ஓடி ஓடி உழைத்து இந்த கட்சியை நான் உருவாக்கி உள்ளேன். வேண்டுமென்றால் அன்புமணி தனி கட்சி தொடங்கிக் கொள்ளலாம். 40 முறை என்னை தொடர்பு கொள்ள முயற்சித்ததாக அன்புமணி கூறும் அனைத்தும் பொய். அவர் என்னை தொடர்பு கொள்ள முயற்சிக்கவே இல்லை.
இனிசியலை தவிற எதையும் பயன்படுத்தக் கூடாது
அன்புமணி இனி ராமதாஸ் என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது. தனது பெயருக்கு முன்பாக இரா. என்ற எழுத்தை மட்டும் இனிஷியலாக பயன்படுத்திக்கொள்ளலாமே தவிற என் பெயரையோ, புகைப்படத்தையோ எங்கும் பயன்படுத்தக் கூடாது என்று கூறி அதிரடி காட்டி உள்ளார். அன்புமணியை கட்சியில் இருந்து நீக்கியதன் மூலம் கட்சியில் எந்தவித பின்னடைவும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
யார் யாரை வேவு பார்ப்பது..?
நான் அமரும் இருக்கையின் கீழ் லண்டனில் இருந்து ஒட்டுகேட்பு கருவியை வைத்ததை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் இல்லை என்றால் அன்புமணியும், அவரது ஆதரவாளர்களும் வளர்ந்திருக்க முடியாது. அன்புமணியின் பின்னணியில் உள்ள நபர்கள் மன்னிப்பு கோரும் பட்சத்தில் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.