- Home
- Tamil Nadu News
- நெருங்கும் சட்டமன்ற தேர்தல்..! சிறை நிரப்பும் போராட்டத்திற்கு தயாராகும் அன்புமணி: தொண்டர்களுக்கு அழைப்பு
நெருங்கும் சட்டமன்ற தேர்தல்..! சிறை நிரப்பும் போராட்டத்திற்கு தயாராகும் அன்புமணி: தொண்டர்களுக்கு அழைப்பு
மாவட்ட வாரியாக உரிமை மீட்பு பயணத்தை மேற்கொண்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அடுத்த 2 மாதங்களில் சிறை நிரப்பும் போராட்டம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.

அன்புமணியின் உரிமை மீட்பு பயணம்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழகம் முழுவதும் உரிமை மீட்க, தலைமுறை காக்க என்ற பெயரில் 100 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அன்புமணி முந்திரி, பலா விவசாயிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தங்கு தடையின்றி கிடைக்கும் போதைப்பொருள்
இதனைத் தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், அமெரிக்காவில் கிடைக்கக் கூடிய அனைத்து வகையான போதைப் பொருட்களும் தற்போது தமிழகத்தில் கிடைக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுக முந்திரி விவசாயிகளுக்கு பல வாக்குறுதிகளை அளித்தது. ஆனால் அவற்றை நிறைவேற்றவில்லை. முக்கனிகளில் ஒன்றான பலாவும் கடலூர் மாவட்டத்தில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. முந்திரி, பலா போன்ற பொருட்களில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயார் செய்ய முடியும். அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பட்சத்தில் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
விவசாய நிகலங்களை அழித்து அவற்றில் இருந்து பழுப்பு நிலக்கரி எடுப்பது நியாயமா? பழுப்பு நிலக்கரியை எரித்து அவற்றில் இருந்து மின்சாரம் எடுக்கும் முறையை பின்பற்றுகின்றனர். உலகம் அறிவியலில் தற்போது எவ்வளவோ முன்னோக்கி சென்றுவிட்டது. பல முறைகளில் மின்சாரத்தை எடுக்க முடியும்.
சிறை நிரப்பும் போராட்டம்
பாமக தொடர்ந்து வன்னியர்களின் இடஒதுக்கீட்டுக்காக போராட்டம் நடத்தி வருகிறது. நாங்கள் கோரும் இட ஒதுக்கீடு வன்னியர்களுக்கு மட்டுமானது கிடையாது. அனைத்து சமூகத்தினரும் பயன் பெற தான். 15 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி அடுத்த 2 மாதத்தில் சிறை நிறப்பும் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த போராட்டத்தில் குறைந்தது 5 லட்சம் வன்னியர்கள் கலந்து கொள்ள வேண்டும். அறவழியில் இந்த போராட்டம் நடைபெற வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.