தமிழகத்தில் இன்று கால் வைக்க போகும் அமித்ஷா.! திமுக, தவெகவை அலறவிடப்போகுது பாஜக
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, பாஜக மூத்த தலைவர் அமித்ஷா இன்று தமிழகம் வருகிறார். தேர்தல் பணிகள் குறித்தும், கூட்டணி வியூகங்கள் குறித்தும் ஆலோசிக்க உள்ளார். நடிகர் விஜயின் பாஜக விமர்சனத்திற்கு பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலுக்கு தயாராகும் அரசியல் கட்சிகள்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் வகையில் 200 தொகுதிகளை இலக்காக கொண்டு களம் இறங்கியுள்ளது.
ஓரணியில் தமிழகம் என வாக்காளர்களை திமுகவில் இணைக்கும் வகையில் வீடு, வீடாக பிராச்சாரம் மேற்கொண்டு வருகிறது. எதிர்கட்சியான அதிமுக தற்போதே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. மக்களை காப்போம்- தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் ஒவ்வொரு தொகுதியாக எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
தமிழகம் வரும் அமித்ஷா
இந்த நிலையில் பலம் வாய்ந்த திமுகவை வீழ்த்த எதிர்ப்பு வாக்குகளை ஒன்றிணைக்க அதிமுக திட்டமிட்டது. இதன் காரணமாக பாஜகவுடன் உறவை முறித்துக்கொண்ட அதிமுக, மீண்டும் தங்களது கூட்டணியை உறுதி செய்துள்ளது. மேலும் தங்கள் கூட்டணியில் முக்கிய கட்சிகளை சேர்க்க ரகசிய ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித்ஷா இன்று தமிழகம் வரவுள்ளார்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் அமித்ஷா தூத்துக்குடி வந்தடைகிறார். அங்கு கட்சி நிர்வாகிகளோடு தனியாக ஆலோசனை நடத்தும் அவர், தமிழக தேர்தல் நிலவரம் கூட்டணி ஏற்பாடு தொடர்பாக ஆலோசிக்கவுள்ளார். இதனையடுத்து மாலை 6 மணிக்கு நடைபெறும் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.
பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் அமித்ஷா
பாரதிய ஜனதா கட்சியின் தென் மண்டல பூத் கமிட்டி மாநாடு திருநெல்வேலியில் இன்று (ஆகஸ்ட் 22) பிரம்மாண்டமாக நடைபெற உள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். இந்த கூட்டத்தில் 50,000-க்கும் மேற்பட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்துகொள்கிறார்கள்.
அமித்ஷாவின் தமிழக பயணம் அரசியல் கட்சிகளிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க திட்டமிடும் பாஜக, திமுக- தவெகவை வீழ்த்த என்ன செய்யலாம் என பாஜக மற்றும் அதிமுக நிர்வாகிகளோடு ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்க்கு பதிலடி கொடுப்பாரா அமித்ஷா
அந்த வகையில் அமித்ஷா தேர்தல் வியூகங்களையும், அடுத்ததாக செய்ய வேண்டிய திட்டங்கள் தோடர்பாக ஆலோசனை வழங்குவார் என கூறப்படுகிறது. மேலும் நடிகர் விஜய் நேற்று தனது மாநாட்டின் போது பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.
எனவே இன்றைய கூட்டத்தில் விஜய்க்கு அமித்ஷா பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் அடுத்தடுத்து அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில் அடுத்த செக் யாருக்கு என்ற கேள்வியானது எழுந்துள்ளது.