- Home
- Tamil Nadu News
- பாஜகவிற்கு நோ.! திமுகவிற்கு ஓகே.! அரசியலில் அதிரடியாக இறங்கிய சத்யராஜ் மகள் திவ்யா
பாஜகவிற்கு நோ.! திமுகவிற்கு ஓகே.! அரசியலில் அதிரடியாக இறங்கிய சத்யராஜ் மகள் திவ்யா
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் இன்று திமுகவில் இணைந்துள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து கட்சியில் இணைந்த அவர், மக்கள் பணி செய்ய வேண்டும் என்பது தனது கனவு என்றும், திமுக பெண்களுக்கு மரியாதை அளிக்கும் கட்சி என்றும் தெரிவித்தார்.

Divya Sathyaraj
அரசியலில் திவ்யா சத்யராஜ்
தமிழ் திரைத்துறை மட்டுமல்ல இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்பப்படங்களில் கலக்கி வருபவர் நடிகர் சத்யராஜ், கதாநாயகன், வில்லன், குணச்சித்திர வேடம் என எந்தவித ரோல் கொடுத்தாலும் அசத்துவார். இவருக்கு சிபிராஜ் என்கிற மகனும், திவ்யா என்கிற மகளும் உள்ளனர்.
அதில் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். மகிழ்மதி என்கிற பெயரில் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் ஏழை எளிய மக்களுக்கு தேவையான ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை வழங்கி வருகிறார்.
Divya Sathyaraj politics
திவ்யாவின் அரசியல் ஆர்வம்
மேலும் அரசியலில் இணைந்து மக்களுக்கு சேவையாற்றுவது தான் தனது கனவாக திவ்யா வைத்துள்ளார். இதனையடுத்து கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அந்த அழைப்பை நிராகரித்த திவ்யா சத்யராஜ் இன்று திமுகவில் இணைந்து கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில், நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் சந்தித்து திமுகவில் இணைந்தார்.
Divya Sathyaraj joined DMK
திமுகவில் இணைந்த திவ்யா சத்யராஜ்
இந்த இணைப்பு நிகழ்ச்சியின் போது திமுக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி. ஆர். பாலு,நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் திவ்யா சத்யராஜ் கூறுகையில், மக்கள் பணி செய்ய வேண்டும் என்பது எனது கனவு. திமுக பெண்களுக்கு மரியாதை தருகின்ற கட்சி உங்களுக்கு எத்தனை பேருக்கு தெரியும் என தெரியவில்லை.
Divya Sathyaraj
பெண்களுக்கு மரியாதை தரும் திமுக
நான் ஒரு ஊட்டச்சத்து நிபுணர், ஆரோக்கியத்திற்கு ரொம்ப முக்கியத்துவம் தருவேன். திமுக ஆரோக்கியத்துக்கு மரியாதை தருகின்ற கட்சி. அதற்கு உதாரணம் தான் பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவு திட்டம். பெண்களுக்கு மரியாதை தருகின்ற கட்சி அதற்கு உதாரணம் தான் புதுமைப்பெண் திட்டம். இது எல்லாத்தையும் விட எல்லா மதத்திற்கும் மரியாதை தருகின்ற ஒரு கட்சி திமுக மட்டும் தான் என திவ்யா தெரிவித்தார்.