மாதம் 40 லட்சம் ஜீவனாம்சம்.! ரவி மோகனுக்கு நீதிமன்றத்தில் செக் வைத்த ஆர்த்தி
ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆர்த்தி தரப்பில் மாதம் 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமான ரவி, தனது பெயரை ஜெயம் ரவி என மாற்றிக்கொண்டார். அடுத்தடுத்து எம்.குமரன் சன் ஆப் மஹாலட்சுமி, பேராண்மை, தனி ஒருவன் உள்ளிட்ட ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துள்ளார். நீண்ட நாள் தோழியான ஆர்த்தியை காதலித்து 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. ஒன்றாக பல இடங்களுக்கு பேட்டியெல்லாம் கொடுத்து அசத்தி கொண்டிருந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆர்த்தியிடம் இருந்து பிரிவதாக ஜெயம் ரவி அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த தகவல் அனைத்து மக்களையும் அதிர்ச்சி அடையவைத்தது. இந்த சூழ்நிலையில் தனது பெயரை ரவி மோகன் எனவும் மாற்றிக்கொண்டார். ஆர்த்தியை பிரிவதாக தெரிவித்த ரவி மோகன் விவகாரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இருதரப்பும் சமரசமாக செல்லும் வகையில் நீதிமன்றத்தில் கவுன்சிலிங் நடத்தியது. இருந்த போதும் ரவி மோகன் விவகாரத்தில் உறுதியாக இருந்தார். இந்த நிலையில் இரு தரப்பும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் விமர்சித்து அறிக்கையை வெளியிட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று தனக்கு ஆர்த்தியிடம் இருந்து விவகாரத்து வேண்டும் என்பதற்கான விளக்கத்துடன் நடிகர் ரவி மோகன் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதே போல், ஆர்த்தி தரப்பில் ஜீவனாம்சம் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தனக்கு மாதம் 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. இந்த மனுக்களுக்கு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஜூன் 12 ம் தேதிக்கு சென்னை 3வது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
பாடகி கெனிஷா பிரான்சிஸுக்கும், ரவி மோகனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதால் தான் தன் திருமண வாழ்க்கை விவாகரத்து வரை சென்றிருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், இரண்டு பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஜோடியாக திருமண நிகழ்வில் கலந்து கொண்டது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.