- Home
- Tamil Nadu News
- மாணவர்களுக்கு குஷியோ குஷி.! ஊட்டி, ஏற்காடுக்கு இலவச சுற்றுலா- அசத்தலான தமிழக அரசின் அறிவிப்பு
மாணவர்களுக்கு குஷியோ குஷி.! ஊட்டி, ஏற்காடுக்கு இலவச சுற்றுலா- அசத்தலான தமிழக அரசின் அறிவிப்பு
தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கோடை விடுமுறையில் நீலகிரி, ஏற்காடு போன்ற குளிர்ப் பிரதேசங்களுக்குச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 1 முடித்த 1500 மாணவர்கள் இதில் பயனடைவார்கள். சிறப்புப் பயிற்சி முகாம்களும் நடத்தப்படவுள்ளன.

மாணவர்களுக்கான கல்வி திட்டங்கள்
தமிழகத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், கல்வி உதவித்தொகை திட்டம், இலவச பேருந்து பயணம், இலவச மிதிவண்டி, காலை மற்றும் மதிய உணவு திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறது. இது மட்டுமில்லாமல் உயர்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் உதவித்தொகை திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
மேலும் இலவச மடிக்கணினி திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. தற்போது மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் வீட்டில் இருந்து வரும் நிலையில் மாணவர்களை ஊட்டி, ஏற்காடு போன்ற குளு குளு இடங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்படவுள்ளனர்.
ஊட்டி, ஏற்காடுவிற்கு சுற்றுலா
அந்த வகையில் கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில்கோடைக் கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்தப்படும் என்று சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அந்த வகையில் நீலகிரி, சேலம் (ஏற்காடு) ஆகிய மாவட்டங்களில் இரு பிரிவுகளாக 5 நாள்கள் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன் படி, அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பை நிறைவு செய்துள்ள மாணவர்களில் கல்வி, அறிவியல், விநாடி-வினா, இலக்கியம், விளையாட்டு, போட்டியில் சிறந்து விளங்கிய 1,500 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
மாணவிகளுக்கு பாதுகாப்பிற்கு பெண் ஆசிரியை
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாணவிகளை அழைத்துச் செல்லும்போது கட்டாயம் 20 பேருக்கு பெண் ஆசிரியர் ஒருவரை அனுமதிக்க வேண்டும். சுற்றுலாவில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தங்களுக்கு தேவையான உடைமைகள், அடையாள அட்டை போன்றவற்றை தவறாமல் கொண்டுவர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சுற்றுலாவிற்கு தயாராகும் 1500 மாணவர்கள்
1500 மாணவர்கள் சுற்றுலாவிற்கு தயாராக இருக்கும் நிலையில் தேர்வுப் பட்டியலில் உள்ள மாணவர்கள் பங்கேற்காத நிலையில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை மதிப்பெண் அடிப்படையில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் பரிந்துரைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முகாம் நடைபெறும் நாள், இடம் பின்னர் தெரிவிக்கப்படும். இந்த மாத கடைசி வாரத்தில் கோடை சுற்றுலா சிறப்பு பயிற்சி முகாம்கள் நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

