சின்ன வெங்காயம் விலை இவ்வளவு தானா.! டன் கணக்கில் குவியல் - விவசாயிகள் அதிர்ச்சி
சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரிப்பால் விலை சரிந்து விவசாயிகள் பாதிப்பு. கோவை தொண்டாமுத்தூரில் 500 டன் சின்ன வெங்காயம் விற்பனையாகாமல் தேக்கம்.

சின்ன வெங்காயம் விளைச்சல்
சமையலுக்கு முக்கிய தேவை காய்கறிகளாகும், அந்த வகையில் சாம்பார், சட்னி போன்றவை தயாரிப்பதற்கு சின்ன வெங்காயத்தை மக்கள் அதிகளவு பயன்படுத்துவார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சின்ன வெங்காயம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.
ஒரு கிலோ 150 ரூபாய் வரை விற்பனையானது. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்த நிலையில் விவசாயிகள் சந்தோஷத்தில் கொண்டாடினர். இதனை நம்பி அதிகளவு சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டது. தற்போது காய்கறி சந்தையில் சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளதால் விலையானது சரிந்துள்ளது.
சரிவை சந்தித்த சின்ன வெங்காயம் விலை
ஒரு கிலோ சின்ன வெங்காயம் 25 முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சில இடங்களில் இதைவிடவும் குறைவான விலைக்கு விற்பனையாகிவருகிறது. இதனால் சின்ன வெங்காயத்தை அதிகளவு நடவு செய்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே போல பெரிய வெங்காயத்தின் விலையும் அதளபாதாளத்திற்கு சரிந்துள்ளது. ஒரு கிலோ பெரிய வெங்காயம் 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
500 டன் சின்ன வெங்காயம் தேக்கம்
இந்த நிலையில் கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மார்ச் மாதத்தில் அறுவடை செய்யப்பட்ட சுமார் 500 டன் சின்ன வெங்காயத்தை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர். கடந்த ஜனவரி மாதத்தில் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் நடவு செய்யப்பட்டது. இதனை மார்ச் மாதத்தில் அறுவடை செய்தனர் இந்நிலையில் வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்காததால் அறுவடை செய்த வெங்காயத்தை பட்டவையில் அடைத்து வைத்து இருந்தனர்.
சின்ன வெங்காயத்தை அடிமட்ட விலைக்கு கேட்கும் வியாபாரிகள்
இங்கு வெங்காயம் வாங்க வரும் மொத்த வியாபாரிகள் அடிமட்ட விலைக்கு கேட்டு வருகின்றனர். தற்பொழுது பருவ மழைக்காக மீண்டும் சின்ன வெங்காயம் நடவு செய்யும் பணி நடந்து வருகிறது. முன்பு அறுவடை செய்த சின்ன வெங்காயமே இன்னும் விற்பனை செய்ய முடியாமல் இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர்.