- Home
- Tamil Nadu News
- தமிழகத்தில் 4 கடற்கரைகள் ஜொலிக்கப்போகுது.! தமிழக அரசின் அட்டகாசமான திட்டம் அறிவிப்பு
தமிழகத்தில் 4 கடற்கரைகள் ஜொலிக்கப்போகுது.! தமிழக அரசின் அட்டகாசமான திட்டம் அறிவிப்பு
தமிழகத்தின் 4 கடற்கரைகளான மெரினா, சில்வர், காமேஸ்வரம் மற்றும் அரியமான் கடற்கரைகளில் நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான உட்கட்டமைப்பு பணிகள் 18 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளன.

இயற்கையான அழகில் தமிழக கடற்கரைகள்
மக்களுக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்று கடற்கரைகள், இயற்கை அழகு மிகுந்த இந்த கடல்களை பார்க்கவே ஏராளமான மக்கள் நாள்தோறும் கடற்கரைக்கு செல்வார்கள். அந்த வகையில், கடற்கரை தூய்மையாகவும், அடிப்படை வசதிகளோடு இருந்தால் கேட்கவா வேண்டும். மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவார்கள்.
அந்த வகையில் டென்மாா்க் நாட்டின் சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை, உலகம் முழுவதும் கடற்கரைகளை ஆய்வு செய்து அதற்கு நீலக்கொடி கடற்கரை தகுதியை வழங்கி வருகிறது. இந்தச் சான்றிதழானது, தூய்மை, பாதுகாப்பு மற்றும் கடற்கரையின் நிலைமை உள்ளிட்ட சர்வதேச தரங்களைப் பூர்த்தி செய்யும் கடற்கரைகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.
கோவளம் கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ்
அந்த வகையில், இந்தியாவில் 8 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் தற்போது வரை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே செங்கல்பட்டில் உள்ள கோவளம் கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த கடற்கரையில் தமிழக அரசு பல்வேறு அடிப்படை வசதிகள், தூய்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது .
இதனைத் தொடர்ந்து பல்வேறு கடற்கரைகளுக்கு இந்த சான்றிதழ்களை வாங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, சென்னை மெரினா உள்ளிட்ட தமிழகத்தின் 4 கடற்கரைகளில் 18 கோடி செலவில் நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான உட்டகட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் 4 கடற்கரை மேம்படுத்த திட்டம்
இதன்படி 6 கோடியில் மெரினா கடற்கரை, 4 கோடியில் கடலூர் சில்வர் கடற்கரை, 4 கோடியில் நாகை காமேஸ்வரம் கடற்கரை, 4 கோடியில் ராமநாதபுரம் அரியமான் கடற்கரை ஆகிய 4 கடற்கரையில் இந்தப் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள இந்த 4 கடற்கரையும் ஜொலிக்கப்போகுது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
நீலக்கொடி சான்றிதழ் வாங்க தேவையான தகுதிகள்
இதன்படி, கடற்கரையை சுற்றியுள்ள பகுதிகள் பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையிலும் பாதுகாப்புடனும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலும் அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், கடற்கரையில் நடைபாதை, மிதிவண்டி தடங்கள், விளையாட்டு பகுதி, படகுத் துறை, கண்காணிப்பு கோபுரம், பாரம்பரியத் தாவரங்கள் குறித்த ஆய்வு போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும் கடற்கரை கண்காணிப்பு குழுவும் அமைக்கப்படும். இந்த பணிகள் முடிந்த பின்னர் இந்த கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.