விவசாயிகளுக்கு 15 ஆயிரம் ரூபாய்.! தமிழக அரசின் அசத்தலான அறிவிப்பு
விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் விவசாயிகளின் வங்கி கணக்கில் 15ஆயிரம் ரூபாய் செலுத்திடும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது

விவசாயம் தான் ஒரு நாட்டின் ஆணிவேராக உள்ளது. அந்த வகையில் விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் மக்கள் சோற்றில் கை வைக்க முடியும் என கூறுவார்கள். அதற்கு ஏற்றார் போல விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கிடும் வகையில் மானிய திட்டம், கடன் உதவி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மேலும் மானிய விலையில் உரம், இலவச மின்சாரம். வறட்சியால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு போன்றவை வழங்கப்படுகிறது. இந்தநிலையில் விவசாயத்திற்கு முக்கிய தேவையாக இருப்பது தண்ணீர். எனவே பயிர்களுக்கு தண்ணீர் உரிய முறையில் கொண்டு செல்ல மின் மோட்டார்கள் முக்கிய அவசியமாக உள்ளது.
விவசாயிகளுக்கு மானிய கடன் உதவி
அந்த வகையில் மின் மோட்டார் வாங்க 15ஆயிரம் ரூபாய் மானியமாக தமிழக அரசு வழங்கி வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசின் வேளாண்மை - உழவர் நலத் துறை வேளாண்மைப் பொறியியல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மின்மோட்டார் பம்புசெட்டுகள் அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் படி, 2024-25 ஆம் ஆண்டில், தமிழ்நாடு அரசு வேளாண்மையில், பயிர் உற்பத்தியை அதிகரிக்கவும், நிலத்தடி நீர்ப் பாசனத்தில் மின்மோட்டார் பம்பு செட்டு அமைப்பதற்கும் விவசாயிகளுக்கு புதிய 4 நட்சத்திர தரத்தில் மின் மோட்டார் பம்புசெட் ரூ.15 ஆயிரம் அல்லது மொத்த விலையில் 50% மானியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் மோட்டார் அமைக்க 15ஆயிரம் ரூபாய்
விவசாயிகளுக்கு பழைய பம்பு செட்டுகள் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட கிணறுக்களுக்கு புதிய 4 நட்சத்திரம் தரம் கொண்ட மின்சார மோட்டார் பம்பு செட்டுகள் வழங்கப்படுகின்றன. மின்சார வாரியம் மூலம் அனுமதிக்கப்பட்ட குதிரைத்திறன் அல்லது அதற்குக் குறைவான குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்டுகள் வாங்கவும் மானியம் வழங்கப்படுவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாருக்கெல்லாம் 15ஆயிரம் ரூபாய்.?
தகுதிகள் என்ன.?
5 ஏக்கர் வரை நிலம் உள்ள விவசாயிகளுக்கு மட்டும் மானியம் வழங்குதல்.
தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை மூலம் ஏற்கனவே நுண்ணீர்ப்பாசனம் நிறுவியுள்ள விவசாயிகள், அல்லது தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை மூலம் நுண்ணீர்ப்பாசனம் அமைத்து கொள்ள விருப்பம் உள்ள விவசாயிகள் மட்டும் தகுதியுடையவர்களாக இருக்கின்றனர்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
மின் மோட்டார் வாங்க மானியம் தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட அளவில் செயற்பொறியாளர்(வே. பொ) அலுவலகம் / வருவாய் கோட்ட அளவில் உள்ள உதவி செயற்பொறியாளர் (வே. பொ) அலுவலகம் / வட்டார அளவில் உதவிப் பொறியாளர்வே. பெரி)/இளநிலைப் பொறியாளர் (வே. பொ) அலுவலகம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.