- Home
- Tamil Nadu News
- 10-ம் வகுப்பு தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியாகிறது! மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்வது எப்படி?
10-ம் வகுப்பு தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியாகிறது! மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்வது எப்படி?
தமிழ்நாடு 10ஆம் வகுப்பு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டு முடிவுகள் இன்று வெளியாகின்றன. மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி தேர்வுத் துறையின் இணையதளத்தில் முடிவுகளைப் பார்க்கலாம்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு
தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28-ம் தேதி முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரையில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, மே 16ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். வழக்கம் போலவே இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று அசத்தி இருந்தனர். இந்நிலையில், குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் தங்களது மதிப்பெண்களில் சந்தேகம் உள்ள மாணவர்களும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது வழக்கம். இந்த கல்வியாண்டு முதல் இதில் பல்வேறு மாற்றங்கள் கொண்ட வரப்பட்டுள்ளது.
மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களின் முடிவுகள்
அதாவது முதலில் விடைத்தாள் நகல் பெற்ற பின்னரே மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடு கோர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்திற்கும் விடைத்தாளின் நகல் (Copy of the answer script) பெறுவதற்கான கட்டணம் ரூ 275 தேர்வர்கள் விடைத்தாள்களின் நகலிற்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 10ம் வகுப்பில் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களின் முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாக உள்ளது.
தேர்வுத் துறை
இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநரம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தமிழகத்தில் 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு எழுதியவர்களில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றமுள்ள மாணவர்களின் பதிவெண் பட்டியல் இன்று (ஜூலை 03) மதியம் வெளியிடப்படுகிறது. அதன் விவரங்களை மாணவர்கள் தேர்வுத் துறையின் www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்வது எப்படி?
இந்த பட்டியலில் இடம்பெறாதவர்களின் விடைத்தாள்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்பது தெரிவிக்கப்படுகிறது. மறு கூட்டல், மறு மதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்கள் மட்டும், மேற்குறிப்பிட்ட இணைய தளத்தில் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து, தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண் அடங்கிய தற்காலிக மதிப்பெண் பட்டியலை (Statement of Marks) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.