- Home
- Tamil Nadu News
- சென்னை
- சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை! அடுத்த 6 நாள்! தேதி குறித்த வானிலை ஆய்வு மையம்!
சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை! அடுத்த 6 நாள்! தேதி குறித்த வானிலை ஆய்வு மையம்!
சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியுள்ளது. சென்னையில் இன்று மழை பெய்யுமா? என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது.

Heavy Rains In Chennai
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. கோவை, தென்காசி, தேனி, நீலகிரி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை தவிர்த்து மற்ற இடங்களில் மழை அந்த அளவுக்கு இல்லை. குறிப்பாக சென்னையில் கடுமையாக வெயில் வாட்டி வந்தது.
சென்னையில் கொட்டிய கனமழை
வெயிலில் இருந்து விடுதலை கிடைத்து எப்போது மழை பெய்யும்? என சென்னை மக்கள் ஏங்கித் தவித்து வந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு திடீரென மழை கொட்டியுள்ளது. செனனி எழும்பூர், நுங்கம்பாக்கம், அண்ணா சாலை, வள்ளுவர் கோட்டம், வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல் ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டியது. சென்னை நகர் மட்டுமின்றி புறநகர் பகுதிகளான காட்டுப்பாக்கம், நசரத்பேட்டை, திருமழிசை, பூந்தமல்லி, செம்பரம்பாக்கம் ஆகிய இடங்களில் கனமழை கொட்டியது.
சென்னையில் இன்று மழை பெய்யுமா?
இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான வானிலை நிலவியதால் சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூலை 4ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு
சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் ஜூலை 4ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக இன்று (ஜூன் 29) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், சில இடங்களில் அதிகபட்சமாக மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். நாளை முதல் ஜூலை 4-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.
அதிகப்பட்ச மழை எங்கே?
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் வால்பாறை, உபாசி, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஆகிய இடங்களில் 4 செ.மீ மழை பெய்துள்ளது. மேலும் கோவை மாவட்டம் சோலையாறு, சின்கோனா, சின்னக்கல்லாறு, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஆகிய இடங்களில் 3 செ.மீ., நீலகிரி மாவட்டம் நடுவட்டம், விண்ட் வொர்த் எஸ்டேட், தேவாலா, தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம், தேனி மாவட்டம் பெரியாறு ஆகிய இடங்களில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்
இது தவிர தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை வரை தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தேனி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.