- Home
- Tamil Nadu News
- சென்னை
- 'குளு குளு' பெங்களூரு போல் மாறும் சென்னை! 3 மாசம் கருணை காட்டிய வெயில்! ஜில் நியூஸ்!
'குளு குளு' பெங்களூரு போல் மாறும் சென்னை! 3 மாசம் கருணை காட்டிய வெயில்! ஜில் நியூஸ்!
சென்னையில் கடந்த 3 மாதங்களில் வெயிலின் தாக்கம் 40 டிகிரி செல்சியசை தாண்டவில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chennai Temperatures Dropped Last 3 months
தமிழ்நாட்டில் கடந்த 3 மாதங்களாக கடுமையான வெயில் கொளுத்தியது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், நெல்லை, நாகர்கோவில் அனைத்து இடங்களிலும் 35 டிகிரி செல்சியசுக்கு மேல் வெயில் வாட்டி வதைத்தது.
இந்த வெயிலில் இருந்து எப்போது விடுதலை கிடைக்கும்? என மக்கள் ஏங்கித் தவித்து வந்த நிலையில், தென் மேற்கு பருவமழை தொடங்கியதால் கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.
சென்னையில் குறைந்தது வெயில்
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் அமுதா, சென்னையில் கடந்த 3 மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அதாவது மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய 3 மாதங்களில் சென்னையில் வெயில் 40 டிகிரி செல்சியசை தாண்டவில்லை. பொதுவாக கோடை காலங்களில் சென்னையில் வெயில் 40 டிகிரி செல்சியசை தாண்டி விடும்.
சென்னையில் 40 டிகிரி செல்சியசை தொடாத வெயில்
ஆனால் இந்த ஆண்டு கோடையில் சென்னையில் மே 4 மற்றும் 5ம் தேதிகளில் மட்டும் வெயில் 39.6 டிகிரி செல்சியஸை தொட்டிருந்தது. மற்ற நாட்களில் வெயிலின் தாக்கம் இதைவிட குறைவாக இருந்தது என்று தென் மண்டலத் தலைவர் அமுதா கூறியுள்ளார்.
சென்னையில் வெயில் குறைவாக பதிவாகி இருப்பது இதுவே முதன்முறை என்று அவர் தெரிவித்துள்ளார். சென்னையில் வெயில் கருணை காட்டினாலும் மற்ற இடங்களில் வெளுத்து வாங்கியுள்ளது.
அதிக வெயில் பதிவானது எங்கே?
அதாவது ஈரோட்டில் மே 15ம் தேதி 41.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. வேலூரில் மே 4 மற்றும் 7 தேதிகளில் அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வெயில் வாட்டியுள்ளது. மதுரையிலும் மே 13, 14 தேதிகளில் 41 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தியுள்ளது.
சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களிலும் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அந்த அளவுக்கு இல்லை என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.