- Home
- Tamil Nadu News
- சென்னை
- சென்னையில் கல்லூரி மாணவி ரயில் முன் தள்ளிவிட்டு கொலை வழக்கு! குற்றவாளிக்கு எதிர்பாராத ட்விஸ்ட் கொடுத்த கோர்ட்!
சென்னையில் கல்லூரி மாணவி ரயில் முன் தள்ளிவிட்டு கொலை வழக்கு! குற்றவாளிக்கு எதிர்பாராத ட்விஸ்ட் கொடுத்த கோர்ட்!
பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில் சதீஷுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது. மேலும், 20 ஆண்டுகளுக்கு தண்டனைக் குறைப்பு வழங்கக்கூடாது.

சென்னையை அடுத்த ஆலந்தூர் காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் மாணிக்கம். கார் ஓட்டுநர். இவரது மனைவி ராமலட்சுமி, ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் ஏட்டாகப் பணியாற்றினார். இத்தம்பதியின் மூத்த மகள் சத்யா(20), தியாகராய நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பிசிஏ 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் சதீஷ் (31) என்பவரைக் காதலித்து வந்தார்.
இந்நிலையில், பெற்றோர் கண்டித்ததால் சத்யா, திடீரென்று காதலை கைவிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்தில் காத்திருந்த சத்யாவை அந்த வழியாக வந்த ரயில் முன்பு தள்ளி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சதீஷ் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை அல்லிகுளம் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி வழங்கப்பட்டது. அதில், சதீஷ்க்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தூக்கு தண்டனையை உறுதி செய்வதற்காக வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதேபோல் சதீஷ் தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில் சதீஷக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டனர். மேலும் 20 ஆண்டுகளுக்கு எந்த தண்டனை குறைப்பும் வழங்கக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

