- Home
- Sports
- Virat Kohli : 2027 உலகக்கோப்பை சஸ்பென்ஸை உடைத்த ‘கிங்’ விராட் கோலி! அதிரடியாக போட்ட கண்டிஷன்!
Virat Kohli : 2027 உலகக்கோப்பை சஸ்பென்ஸை உடைத்த ‘கிங்’ விராட் கோலி! அதிரடியாக போட்ட கண்டிஷன்!
Virat Kohli: 2027 ஓடிஐ உலகக்கோப்பையில் விளையாடுவது குறித்து விராட் கோலி வெளிப்படையாக பேசியுள்ளார். தான் சாதனைக்காக ஒருபோதும் விளையாடியதில்லை என்று அவர் கூறியுள்ளார்.

2027 ஓடிஐ உலகக்கோப்பை குறித்து பேசிய விராட் கோலி
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், ஒருநாள் போட்டிகளில் முக்கிய வீரராகத் தொடர்கிறார். தென்னாப்பிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வே இணைந்து நடத்தும் 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் கோலி விளையாடுவாரா என்ற சஸ்பென்ஸுக்கு ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்த நிலையில், இப்போது நடந்து வரும் ஐபிஎல் 2026 சீசனுக்கு இடையில், கோலி தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

இந்தியாவுக்கு விளையாடுவது அற்புதமான விஷயம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) பாட்காஸ்ட்டில் பேசிய கோலி, இந்தியாவுக்காக மீண்டும் ஒரு உலகக் கோப்பையை வெல்லும் ஆசையை வெளிப்படுத்தியதுடன் ஒரு நிபந்தனையையும் வைத்தார். பரஸ்பர மரியாதையும், மதிப்பும் இருக்கும் இடத்தில் மட்டுமே தான் விளையாடுவேன் என்று தெளிவாகக் கூறினார். 'நாம இப்போ 2026-ன் பாதியில இருக்கோம். 'நீங்க 2027 உலகக் கோப்பையில ஆடுவீங்களா?'னு நிறைய பேர் கேட்குறாங்க. நான் சும்மா டைம்பாஸ் பண்ணவா இங்க வந்திருக்கேன்? நான் கிரிக்கெட் ஆடணும்னு நினைச்சா, கண்டிப்பா ஆடுவேன். இந்தியாவுக்காக உலகக் கோப்பை விளையாடுவது எப்போதுமே ஒரு அற்புதமான விஷயம்' என்று கோலி கூறினார்.
100% உழைப்பை கொடுப்பேன்
களத்தில் மற்றவர்களை விட அதிகமாக உழைப்பதாக கோலி கூறினார். 'நான் ஒரு போட்டியில் ஆடினால், யாருக்கும் குறைவாக இல்லாமல் முழு உழைப்பையும் கொடுப்பேன். ஒருநாள் போட்டியில் 40 ஓவர்கள் பவுண்டரி லைனில் ஓடச் சொன்னாலும், ஒரு புகார் கூட இல்லாமல் ஓடுவேன். என் பயிற்சி அப்படிப்பட்டது. என் கரியரில் இதுதான் கடைசிப் பந்து என்று நினைத்து 50 ஓவர்களும் ஃபீல்டிங் செய்வேன். பேட்டிங், ரன்னிங் எல்லாமே அதே வேகத்தில்தான் இருக்கும். அணிக்காக என் சிறந்ததைக் கொடுப்பேன். இவ்வளவு செய்த பிறகும், என் மதிப்பை நிரூபிக்க வேண்டும் என்ற நிலை வந்தால், அந்த இடம் எனக்கு சரிப்பட்டு வராது. இதில் என் மனதில் எந்தக் குழப்பமும் இல்லை' என்று கோலி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
சாதனைக்காக விளையாடவில்லை
இப்போது தனது கவனம் எண்கள் அல்லது சாதனைகள் மீது இல்லை, ஆட்டத்தை ரசிப்பதற்காக மட்டுமே விளையாடுவதாக கோலி கூறினார். 'நான் மீண்டும் களத்திற்குச் சென்றபோது, யாருக்கும் எதையும் நிரூபிக்க விரும்பவில்லை. எனக்கு கிரிக்கெட் விளையாடப் பிடிக்கும், அதனால் விளையாடுகிறேன். விஜய் ஹசாரே டிராபியையும் அப்படித்தான் விளையாடினேன். பெங்களூருவில் உள்ள பிசிசிஐயின் சிறப்புப் பயிற்சி மையத்தில் யாருமே இல்லை. இவ்வளவு காலம் விளையாடிய பிறகு அங்கு விளையாட உத்வேகம் இருக்குமா என்று முதலில் நினைத்தேன்.
ஆனால், 'நான் பேட்டிங்கை விரும்புகிறேன், அதில் கவனம் செலுத்துவேன்' என்று என் எண்ணம் மாறியதும், எனக்கு ஸ்டேஜ் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை' என்றார் கோலி. இந்திய அணி அடுத்ததாக ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானுடனும், ஜூலையில் இங்கிலாந்துடனும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் கோலி இடம்பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
பிரம்மிக்க வைக்கும் கோலி சாதனை
விராட் கோலியின் ஒருநாள் போட்டி சாதனைகள் பிரமிக்க வைக்கின்றன. நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசியாக ஆடிய 7 ஒருநாள் இன்னிங்ஸ்களில் கோலி 3 சதங்களையும் 3 அரை சதங்களையும் அடித்துள்ளார். உள்நாட்டு 50 ஓவர் போட்டியான விஜய் ஹசாரே டிராபியிலும், வெறும் இரண்டு போட்டிகளில் 131, 77 ரன்கள் எடுத்தார். ஐபிஎல் 2026 சீசனிலும் கோலி அசத்தி வருகிறார். ஆர்சிபி அணிக்காக 12 இன்னிங்ஸ்களில் 165.75 ஸ்டிரைக் ரேட்டுடன், ஒரு சதம், மூன்று அரை சதங்கள் உட்பட 484 ரன்கள் குவித்து, இந்த சீசனின் மூன்றாவது அதிக ரன் எடுத்த வீரராக உள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

