ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு தொடரையும் ழுழுமையாகக் கைப்பற்றி அசத்தி உள்ளது. தொடர் நாயகனாக அணியின் கேப்டன் சுப்மன் கில் தேர்வு
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா, ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது (whitewash). முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 219 ரன்கள் என்ற வெற்றி இலக்கை, இந்திய அணி 28.4 ஓவர்களில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து எட்டியது. தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 86 பந்துகளில் 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ரோஹித் சர்மா 69 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 19 பந்துகளில் 20 ரன்களுடன் ஜெய்ஸ்வாலுக்குத் துணையாக நின்று வெற்றியை உறுதி செய்தார். ஸ்கோர் விவரம்: ஆப்கானிஸ்தான் 44.2 ஓவர்களில் 218 ஆல் அவுட், இந்தியா 28.4 ஓவர்களில் 224/1.
219 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய ரோஹித்தும் ஜெய்ஸ்வாலும் நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கினர். தொடக்கத்தில், பிட்ச்சின் தன்மையைப் பயன்படுத்தி ஆப்கான் வேகப்பந்து வீச்சாளர்கள் ரோஹித்துக்கு நெருக்கடி கொடுத்தனர். 10 ரன்களில் இருந்தபோது ரோஹித் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஆப்கானிஸ்தான் தவறவிட்டது. ஆனால், நிலைத்து நின்ற பிறகு இருவரும் அதிரடி காட்ட, முதல் விக்கெட்டுக்கு 22.5 ஓவர்களில் 170 ரன்கள் சேர்த்தனர்.
69 பந்துகளில் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் எடுத்த நிலையில் ரோஹித் ஆட்டமிழந்தார். மூன்றாவது வீரராக வந்த ஷ்ரேயாஸ் ஐயரும் ஜெய்ஸ்வாலும் சேர்ந்து, வேறு விக்கெட் இழப்பின்றி இந்தியாவின் வெற்றியை எளிதாக்கினர். முகமது நபி பந்துவீச்சில் சிக்ஸர் அடித்து, 83 பந்துகளில் தனது இரண்டாவது ஒருநாள் சதத்தைப் பதிவு செய்தார் ஜெய்ஸ்வால். தொடர்ந்து ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸர் அடித்து இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஜெய்ஸ்வாலின் இந்த இன்னிங்ஸில் 14 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும். இந்த வெற்றியின் மூலம், 2025 ஜனவரிக்குப் பிறகு முதல் முறையாக ஒருநாள் தொடரை இந்தியா முழுமையாக வென்றுள்ளது. இதற்கு முன் 2025-ல் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தொடரை முழுமையாக வென்றிருந்தது.
முன்னதாக, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 44.2 ஓவர்களில் 218 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாஹிதி சதம் அடித்து அணியைக் காப்பாற்றினார். 126 பந்துகளில் தனது முதல் ஒருநாள் சதத்தைப் பதிவு செய்த ஷாஹிதி, 130 பந்துகளில் 102 ரன்கள் எடுத்தார். அஸ்மத்துல்லா ஒமர்சாய் 56 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து நல்ல ஆதரவு கொடுத்தார். இவர்களைத் தவிர, முகமது நபி (21), இப்ராஹிம் சத்ரான் (11) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எட்டினர். இந்திய தரப்பில் பிரசித் கிருஷ்ணா 8.2 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆப்கானிஸ்தான் கேப்டன் பிட்ச்சின் அபாயகரமான பகுதியில் ஓடியதால், 5 ரன்கள் பெனால்டியாக விதிக்கப்பட்டது. இதனால், இந்திய அணி பேட்டிங் தொடங்கும் முன்பே ஸ்கோர் போர்டில் 5 ரன்கள் சேர்க்கப்பட்டது.


