CSK vs RCB: சிஎஸ்கே தோல்விக்கு என்ன காரணம்? மனம் திறந்து பேசிய கேப்டன் தோனி!
ஆர்சிபி அணிக்கு எதிராக சிஎஸ்கேவின் தோல்விக்கான காரணம் குறித்து கேப்டன் எம் எஸ் தோனி விளக்கம் அளித்துள்ளார்.

MS Dhoni explained reason for CSK's Defeat: ஐபிஎல் தொடரில் நேற்று ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 213 ரன்கள் குவித்தது. விராட் கோலி 33 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 62 ரன்கள் எடுத்தார். ஜேக்கப் பெத்தெல் 33 பந்துகளில் 55 ரன்கள் அடித்தார். கடைசி கட்டத்தில் சிக்சர் மழை பொழிந்த ரொமோரிரோ ஷெப்பர்ட் வெறும் 14 பந்துகளில் 6 சிக்சர்கள், 4 பவுண்டரியுடன் 53 ரன்கள் அடித்து சாதனை படைத்தார்.
CSK vs RCB, IPL
சிஎஸ்கே போராடி தோல்வி
இமாலய இலக்கை நோக்கி பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து நூலிழையில் வெற்றியை தவற விட்டது. இளம் வீரர் ஆயூஷ் மாத்ரே 48 பந்தில் 9 பவுண்டரி, 5 சிக்சருடன் 94 ரன்கள் விளாசினார். ரவீந்திர ஜடேஜா 45 பந்தில் 77 ரனகள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை. பவுலிங்கில் கடைசி 2 ஓவர்களில் 55 ரன்கள் விட்டுக்கொடுத்ததும், பேட்டிங்கில் யஷ் தயாளில் சூப்பர் பவுலிங்கில் 15 ரன்கள் அடிக்க முடியாததுமே சிஎஸ்கே தோல்விக்கு காரணமாகி விட்டது.
IPL 2025, MS Dhoni
தோல்விக்கு பொறுப்பேற்ற தோனி
இதுவரை படுதோல்வியை சந்தித்து வந்த சிஎஸ்கே, நேற்றைய போட்டியில் போராடி தோற்றதால் ரசிகர்கள் ஓரளவு ஆறுதல் அடைந்தனர். இந்த போட்டிக்கு பிறகு பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி தோல்விக்கு நானே பொறுப்புபேற்றுக் கொள்கிறேன் என்றார். இது தொடர்பாக பேசிய அவர், ''கடைசியில் சில ஷாட்களை ஆடி அழுத்தத்தைக் குறைத்திருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நினைத்தபடி நடக்கவிலை. அதனால் நான் அதற்குப் பழியை ஏற்றுக்கொள்கிறேன். டெத் ஓவர்களில் ஷெப்பர்ட் சிறப்பாக பேட்டிங் செய்தார். நாங்கள் என்ன தான் பந்து வீசினாலும், அவரால் அதிகபட்ச ரன்களை அடிக்க முடிந்தது'' என்று தெரிவித்தார்.
யார்க்கர்களை வீச பயிற்சி செய்ய வேண்டும்
தொடர்ந்து பேசிய தோனி, ''நாங்கள் அதிக யார்க்கர்களை வீச பயிற்சி செய்ய வேண்டும். பெரும்பாலும், பேட்டர்கள் அடிக்கத் தொடங்கும்போது, நீங்கள் யார்க்கர்களை அதிகம் நம்பியிருக்க வேண்டும். யார்க்கரை சரியாக போட முடியாவிட்டால், லோ ஃபுல் டாஸ் அடுத்த சிறந்த விருப்பமாகும். பதிரனா போன்ற பவுலருக்கு அதிக வேகம் உள்ளது. அவர் நன்றாக பவுன்சரையும் வீச முடியும். அவர் யார்க்கரை தவறவிட்டால் பேட்ஸ்மேன் அதை சிக்சர் போன்ற பெரிய ஷாட் அடிக்க வாய்ப்பு உள்ளது'' என்று கூறினார்.
MS Dhoni and Virat Kohli
புதிய ஷாட் விளையாட வேண்டும்
மேலும் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் புதிய ஷாட் விளையாட வேண்டும் என்பது குறித்து பேசிய தோனி, ''எல்லா பேட்டர்களும் பேடில் ஷாட்டை விளையாட வசதியாக இல்லை. ஆனால் அது நவீன யுகத்தில் பேட்டர்கள் பயிற்சி செய்ய வேண்டிய ஒன்று. ஆனால் எங்கள் பெரும்பாலான பேட்டர்கள் அதை விளையாட வசதியாக இல்லை. ஜடேஜா அந்த ஷாட்டை விளையாடுகிறார். ஆனால் அவர் தனது ஷாட்களை தரையில் அதிகமாக விளையாடுகிறார். பேட்டிங் நாங்கள் சற்று பின்தங்கிய ஒரு பகுதியாகும். ஆனால் இன்று ஒருங்கிணைந்த் பேட்டிங்கில் மிகவும் சிறப்பாக செயல்பட்டதாக உணர்கிறேன்'' என்று தெரிவித்தார்.