சாம்பியன்ஸ் டிராபி: இந்திய வீரர்கள் மனைவிகளுடன் செல்ல தடை? பிசிசிஐ அதிரடி!
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க துபாய் செல்லும் இந்திய வீரர்கள் தங்கள் மனைவியை அழைத்துச் செல்ல பிசிசிஐ தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சாம்பியன்ஸ் டிராபி: இந்திய வீரர்கள் மனைவிகளுடன் செல்ல தடை? பிசிசிஐ அதிரடி!
'மினி உலகக்கோப்பை' எனப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19ம் தேதி முதல் மார்ச் மாதம் 9ம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இந்த தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. இந்தியா அங்கு செல்ல மறுத்து விட்டதால் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறும். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்தியா உள்பட அனைத்து அணிகளின் வீரர்களும் அறிவிக்கப்பட்டு விட்டனர்.
இந்த தொடருக்காக இந்திய அணியினர் துபாய் புறப்பட்டுச் செல்ல தயாராக உள்ள நிலையில், இந்திய வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பயணம் செய்ய பிசிசிஐ அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்திய வீரர்கள் துபாய்க்கு தங்களது மனைவி மற்றும் குடும்பத்தினரை அழைத்து செல்லக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 4 1 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்த பிறகு இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இந்திய வீரர்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது குடும்பத்தினர் மற்றும் மனைவிகளை அழைத்துச் செல்லக்கூடாது.
ஒரு தொடர் அல்லது போட்டி 45 நாட்களுக்கு மேல் நீடித்தால் மட்டுமே வீரர்களின் குடும்பங்கள் இந்திய அணியுடன் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், அவர்களுக்கு அதிகபட்சம் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என்று பிசிசிஐ உத்தரவில் தெரிவித்து இருந்தது.
ரிஷப் பண்ட்டை காப்பாற்றியவர் காதலியுடன் தற்கொலை முயற்சி; காதலி உயிரிழப்பு!
இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ கட்டுப்பாடு
இந்நிலையில், மூத்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் சாம்பியன்ஸ் டிராபிக்காக துபாய் செல்லும்போது மனைவியை அழைத்துச் செல்வது குறித்து விசாரித்ததாகவும், பிசிசிஐயின் புதிய கொள்கைகள் குறித்து அவருக்கு நினைவூட்டப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ''இப்போதைக்கு இந்த சுற்றுப்பயணத்திற்கு வீரர்கள் தங்கள் மனைவிகள் அல்லது குடும்பத்தினர்களுடன் செல்ல வாய்ப்பில்லை.
இது குறித்து மூத்த வீரர் ஒருவர் கேட்டபோது, உத்தரவை பின்பற்றுங்கள் என்று பிசிசிஐ சொல்லி விட்டது. இந்த சுற்றுப்பயணம் ஒரு மாதத்திற்கும் குறைவானது என்பதால் வீரர்களுடன் குடும்பத்தினர்களுடன் செல்லக்கூடாது'' என பெயர் வெளியிட விரும்பாத ஒரு அதிகாரி தெரிவித்தார்.
இந்தியா-பாகிஸ்தான் போட்டி
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான செய்தியாளர்கள் சந்திப்பின் போது, இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவிடம் பிசிசிஐயின் இந்த கொள்கைகள் குறித்து கேட்கப்பட்டது. ஆனால் அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. இந்திய வீரர்கள் தங்கள் மேனேஜர்களையும், உதவியாளர்களையும் உடன் அழைத்து செல்லவும் பிசிசிஐ தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 8 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் ஏ பிரிவில் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்த தொடர் தொடங்கும் பிப்ரவரி 19ம் தேதி நியூசிலாந்தும், பாகிஸ்தானும் மோதுகின்றன. உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டி பிப்ரவரி 23ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
சாம்பியன்ஸ் டிராபி: முழு அட்டவணை! போட்டிகள் தொடங்கும் நேரம்? எந்த டிவியில் பார்க்கலாம்?