- Home
- Sports
- Sports Cricket
- வசமாக சிக்கிய யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா! சுத்துப் போட்ட அமலாக்கத்துறை! வீட்டுக்கே பறந்த நோட்டீஸ்!
வசமாக சிக்கிய யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா! சுத்துப் போட்ட அமலாக்கத்துறை! வீட்டுக்கே பறந்த நோட்டீஸ்!
சட்டவிரோத பெட்டிங் ஆப் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா ஆகியோருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கெனவே இந்த விவகாரத்தில் ஷிகர் தவானிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

யுவராஜ் சிங் மற்றும் ராபின் உத்தப்பா
சட்டவிரோத பெட்டிங் ஆப் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் ராபின் உத்தப்பாவுக்கு அமலாக்கத்துறை (ED) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சட்டவிரோத பெட்டிங் ஆப்களின் விளம்பரத்தில் நடித்தது மற்றும் பணமோசடிக்கு உடந்தையாக இருந்தது தொடர்பான புகாரில் இருவரையும் விசாரணைக்கு அழைத்துள்ளது.
யுவராஜ் சிங், ராபின் உத்தப்பாவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
முன்னதாக பாலிவுட் பிரபலங்கள் உட்பட பலரிடம் இந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது. ராபின் உத்தப்பா இந்த மாதம் 22ஆம் தேதியும், யுவராஜ் சிங் 23ஆம் தேதியும் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமையகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக கடந்த ஜூன் மாதமும் யுவராஜ் சிங் அமலாக்கத்துறை முன் ஆஜராகியிருந்தார்.
ஷிகர் தவானிடம் 8 மணி நேரம் விசாரணை
1xBet என்ற சூதாட்ட செயலி தொடர்பாகவே கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 2022ல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற உத்தப்பா, 1xBet விளம்பரங்களில் நடித்துள்ளார். முன்னதாக, முன்னாள் இந்திய வீரர்களான ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா ஆகியோரிடமும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. ஷிகர் தவானிடம் 8 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
சோனு சூட், ஊர்வசி ரவுடேலா
இதேபோல் இந்த விவகாரம் தொடர்பாக பாலிவுட் நடிகர் சோனு சூட் இந்த மாதம் 24ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மிமி சக்ரவர்த்தி, பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா, பெங்காலி நடிகர் அங்குஷ் ஹஸ்ரா ஆகியோரிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது. 1xBet-ன் இந்திய பிராண்ட் தூதராக ஊர்வசி ரவுடேலா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் சூதாட்ட தளங்களுக்கு தடை
ஆன்லைன் சூதாட்ட தளங்களுக்கு முழுமையாக தடை விதிக்கும் வகையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் பணம் வைத்து விளையாடும் அனைத்து ஆன்லைன் கேம்களுக்கும் தடை விதிக்கிறது. இதையும் மீறி ஆன்லைன் சூதாட்ட சேவைகளை வழங்குபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.1 கோடி வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.