- Home
- Sports
- Sports Cricket
- அமலாக்கத்துறை பிடியில் யுவராஜ் சிங்! கிடுக்குப்பிடி விசாரணை! சிக்கிய ஆதாரம்? என்ன நடந்தது?
அமலாக்கத்துறை பிடியில் யுவராஜ் சிங்! கிடுக்குப்பிடி விசாரணை! சிக்கிய ஆதாரம்? என்ன நடந்தது?
சட்டவிரோத பெட்டிங் ஆப் மோசடி வழக்கு தொடர்பாக இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கிடம் அமலாக்கத்துறை விசாரனை நடத்தியது. நேற்று ராபின் உத்தப்பாவிடம் விசாரனை நடத்தப்பட்டு இருந்தது.

ED Questions Yuvraj Singh
ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான பணமோசடி வழக்கில் இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று ஆஜரானார். சட்டவிரோத பெட்டிங் ஆப் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு யுவராஜ் சிங் மற்றும் ராபின் உத்தப்பாவுக்கு அமலாக்கத்துறை (ED) கடந்த 15ம் தேதி நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
யுவராஜ் சிங்கிடம் அமலாக்கத்துறை விசாரணை
சட்டவிரோத பெட்டிங் ஆப்களின் விளம்பரத்தில் நடித்தது மற்றும் பணமோசடிக்கு உடந்தையாக இருந்தது தொடர்பான புகாரில் இருவரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். அதன்படி ராபின் உத்தப்பா நேற்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகி இருந்த நிலையில், யுவராஜ் சிங் இன்று விசாரணைக்கு ஆஜரானார். ஆனாலும் அவர் தாமதமாகவே அமலாக்கத்துறை முன் ஆஜரானார் என்று ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
யுவராஜ் சிங் விளம்பரம் செய்தாரா?
அதாவது இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி யுவராஜ் சிங்கை அமலாக்கத்துறை கேட்டுக் கொண்ட நிலையில், அவர் உரிய நேரத்தில் ஆஜராகவில்லை. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. யுவராஜ் சிங், 1xBet செயலிக்கு விளம்பரம் செய்தாரா? தனது புகைப்படத்தை அதற்குப் பயன்படுத்த அனுமதித்தாரா? மற்றும் அதற்காகப் பணம் பெற்றாரா? என்பது குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னாவிடம் விசாரணை
1xBet என்ற சூதாட்ட செயலிக்கு விளம்பர செய்தது தொடர்பாக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்களிடம் அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் இந்திய வீரர்களான ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டு இருந்தது.
விசாரணை வளையத்தில் பல்வேறு பிரபலங்கள்
மேலும் திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மிமி சக்ரவர்த்தி, பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா, பெங்காலி நடிகர் அங்குஷ் ஹஸ்ரா ஆகியோரிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இருந்தது. பிரபலங்கள் பெற்ற பணம் ஹவாலா மூலம் பெறப்பட்டதா அல்லது சட்டப்பூர்வ வங்கி சேனல்கள் மூலம் பெறப்பட்டதா என்பதை அமலாக்கத்துறை அறிய விரும்புகிறது.
1xBet உடனான அவர்களது ஒப்பந்தங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களைப் பகிருமாறும் அமலாக்கத்துறை கேட்டுள்ளது.